(க.கிஷாந்தன்)

வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டன் ஸ்டிரதன் தோட்டத்தைச் சேர்ந்த வை.லக்மிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மதில் உடைந்து சிறுமி மீது வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதில் படுகாயமடைந்த சிறுமி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.