(எம்.மனோசித்ரா)

மார்ச் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Image result for ol virakesari

அத்தோடு நாளை 17 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு கற்பதற்காக  விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார தரப்பினரின் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இம்முறை முதலாம் தரத்தில் இணையும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவற்றை நடுவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

2020 இல் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்ப்பட்டிருந்த சாதாரணதர பரீட்சைகள் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக 2021 ஜனவரி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

எனினும் மேல் மாகாணத்தில் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை அங்குள்ள பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மீண்டும் மார்ச் முதலாம் திகதி வரை சாதாரணதர பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொவிட் அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் சிலர் பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் வெவ்வேறு விழாக்கள் நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இவ்வாறான விழா கொண்டாட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.