(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது.

இந்நிலையில், இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். பல்லேதலவின்ன பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நுகேகொட பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வத்தளை பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர் அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். ஹுன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 10 மணி வரை 774 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 76428 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 69 411 பேர் குணமடைந்துள்ளதோடு 6157 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

664 பேர் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்திற்கமைய இது வரையில் ஒரு இலட்சத்து 89 349 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 29 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை 146, 327 பேருக்கும் , பெப்ரவரி 5 தொடக்கம் 11 வரை 9983 பேருக்கும் , 12 ஆம் திகதி 1110 பேருக்கும் , 13 ஆம் திகதி 7457 பேருக்கும் , 14 ஆம் திகதி 2695 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.