(எம்.ஆர்.எம்.வசீம்)

பாடசாலைகளில் இடம்பெற இருக்கும் அனைத்து விசேட நிகழ்வுகளையும் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் அனைத்து மாகாண கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் 19 தொற்று நிலைமையில் ஏற்பட்டிருக்கும் எச்சரிக்கை நிலைமை மற்றும் பாதுகாப்பற்ற நிலைமையை கருத்திற்கொள்ளாது சில பாடசாலைகளில் பல்வேறு நிகழ்விகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அதனால் பாடசாலைகளில் இடம்பெற இருக்கும் அனைத்து விசேட நிகழ்வுகளையும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதன் பிரகாரம் தற்போது  பாடசாலைகளில் ஏதாவது நிகழ்வொன்றுக்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இருந்தால், அதனையும் எதிர்காலத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கும் நிகழ்வுகளையும் மறு அறிவித்தல்வரை ஒத்துவைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

ஏனெனில் தற்போதைய நிலைமை, அனைத்து பாடசாலை சமூகத்தினதும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் மிகவும் பொறுப்புடன் மற்றும் அவதானமாக செயற்படவேண்டிய காலமாகும். அதனால் இதுதொடர்பாக மிகவும் அவதானமாக செயற்படவேண்டும்