-நமது அரசியல் நிருபர்

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்துக்கு எதிராக கிளர்ந்தெழும்பிய ஆளும்தரப்புக்குள்ளே இருந்தான எதிர்ப்பலையானது கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் எதிரொலித்தது. 

இது அரசாங்கத்தில் உள்ள தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது என்று  'அரசியல் சாணக்கியமறிந்தவர்கள்' கருதிக்கொண்டனர். அத்துடன் ஆளும் தரப்புக்குள் இரண்டு, மூன்று அணிகள் இயங்குகின்றன என்பதும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது. 

இருப்பினும், இந்த நிலைமையானது கடந்தவாரம் வேறொரு பரினாமத்தினை எடுத்திருந்தது. அதாவது தென்னிலங்கை அரசியலில் ஐந்து தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்துடன் 'பழம் தின்று கொட்டைபோட்டவரான’ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அடிமடியில் கைவைக்கும் நிலைமையொன்று ஏற்பட்டதால் தென்னிலங்கை அரசியலே கதிகலங்கிப்போயிருக்கின்றது. 

அதுதான் பிரதமர் மஹிந்தவிடமிருக்கும் பொதுஜனபெரமுனவின் தலைமைப்பதவியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கவேண்டும் என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ததாக வெளியான கருத்துதான் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. கூடவே பிரதமர் பதவி விலகப்போவதாக அமைச்சர் நாமலை மையப்படுத்தி வெளியான தகவலும் இணைந்திருக்கின்றது.

மஹிந்தவை மையப்படுத்திய பிரசாரம் 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.  உறுதிப்படுத்தப்படாத வகையில் மிகவும் சூட்சமமாக இந்த தகவல் பரப்பப்பட்டு இருந்தது. இதற்கு ஒரு குரல் பதிவும் பயன்படுத்தப்பட்டது.

அதாவது  2018ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடி ஏற்பட்ட  சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அந்த பதவியை இராஜினாமா செய்யப்போகிறார் என்று அப்போது நாமல் ராஜபக்ஷ தொலைபேசியில் ஒருவருக்கு தெரிவித்த குரல் பதிவை வைத்துக்கொண்டே இந்த வதந்தி பரப்பப்பட்டது.

ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடுமையான சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியிடப்பட்டு ஒரு சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதனால் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகரை சந்தித்த படமும் வெளியிடப்பட்டிருந்தது. அதேபோன்று அவர் உடற்பயிற்சி செய்த படங்களும் வெளிவந்தன.

அந்த வகையிலேயே தற்போது இந்த கருத்து சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.  எனினும் இதனை பிரதமரின் அலுவலக அதிகாரி யோசித்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.  இவ்வாறான வதந்திகள் காரணமாக  பிரதமர்  மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறான கருத்துக்கள் காரணமாக அவர் அடிக்கடி வெளியே வந்து நான் நலமாக இருக்கின்றேன் என்பதை வெளிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய வதந்திகளை கடந்த தேர்தலின்போது,   அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் கொழும்பில் இருந்து கொண்டு சமூக ஊடகங்களைப்  பயன்படுத்தி  பரப்பி வருவதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர்   தெரிவித்தார்.

விமல் எதிர்கொண்ட நெருக்கடி

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் தற்போது   சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கடுமையான முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் காணப்படுகின்றன.  

அமைச்சர் விமல் வீரவன்சவின்  அமைச்சர் பதவியை மீளப்பெறவேண்டும் என்ற கருத்துக்களும் கட்சிக்குள் முன்வைக்கப்படுகின்றன.  அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை விமல் வீரவன்ச வெளிப்படுத்திய  தினத்தில் இருந்து இந்த முரண்பாட்டு நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றிருக்கின்றது. அதன்போதும் விமல் வீரவன்ச விடயம் பேசப்பட்டதுடன் அவரின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அப்போது விமல் வீரவன்சவுக்கு  ஆதரவாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பேச முயற்சிக்கையில்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் வாசுதேவவுக்கும்   இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகைக்கு பாரியதொரு பின்னணியை உருவாக்கியதாக வாசுதேவ நாணயக்கார கூற முற்பட்டபோதும் அதற்கு எதிரான கருத்துக்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்,  விமல் வீரவன்ச தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள ஒரு முக்கிய அரசியல் தலைவரின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறான எதிர்ப்புகள் முரண்பாடுகள் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது அதில் இரட்டை குடியுரிமை தடை விவகாரம்  நீக்கப்பட்டது.  அதனை கடுமையாக எதிர்த்த விமல் வீரவன்ச இறுதியில் ஜனாதிபதியின் உறுதியையடுத்து அதற்கு ஆதரவு  வழங்கினார்.  

ஆனால் ஆதரவு வழங்குவதற்கு முன்னதாக அந்த ஏற்பாட்டை பயன்படுத்தி எந்த ஒருவரும் பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்க மாட்டார்கள் என்று, தான் நம்புவதாக தெரிவித்திருந்தார். அது பசில் ராஜபக்ஷவை நோக்கியே கூறப்பட்டதாக அப்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

கடந்த வியாழக்கிழமை  ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 10 அரசியல் கட்சிகள் விமல் வீரவன்சவின் இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளன.  ஆளும் கட்சிக்குள் விமலுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும்  அடுத்தக்கட்டமாக பங்காளிக் கட்சிகள் என்ன செய்வது என்றும்  ஆராய்ந்துள்ளனர். 

அதன்படி, பத்துக்கட்சிகளும் அடுத்துவரும் நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த உள்ளிட்டவர்களையும் ராஜபக்ஷ சகோதரர்களையும் சந்திக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற உணவகத்தில் பிரதமர் மஹிந்தவைச் சந்தித்த அமைச்சர் விமல், 'சேர் நான் உங்களுக்கு எதிராக செயற்படுவதாக கூறி பிரசாரம் செய்கின்றார்கள்' என்றிருக்கின்றார். 

அதற்கு பிரதமரும் தனது வழமையான பாணியிலேயே  'அவற்றை பொருட்படுத்தாதீர்கள் விமல்' என்று பதிலுரைத்துவிட்டு நகர்ந்துவிட்டார். 

அந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் பிரதமரைச் சந்தித்த அமைச்சர் ஜோன்சன், 'சேர் உங்களை பதவி நீக்க யாரும் முனையவில்லை, ஆனால் கட்சியின் தலைமைத்துவத்தினை ஜனாதிபதிக்கு வழங்க முயற்சிக்கின்றார்கள்' என்று  கவுண்டரின் வாழைப்பழ கதைபோன்று  கூறியிருக்கின்றார். 

அதனையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு சென்றுவிட்டாராம் பிரதமர்.

இந்த சம்பவங்களின்போது பிரதமர் அருகில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர். 

இதனிடையே, ஆளும் தரப்பின் தற்போதைய பிளவுக்கு 'வல்லரசு கனவில்' உள்ள இரு நாடுகளின் 'உளவுப்பிரிவு' காரணமாக இருப்பதாக ஆளும் தரப்பிற்குள்ளேயே தெரிவிக்கப்படுகின்றது. அதுபற்றிய ஆராய்வுகளும் தலைமைகளால் முடுக்கி விடப்பட்டுள்ளதாக உள்ளகத்தகவல்கள் கூறுகின்றன. 

பிரதமரின் அறிவிப்பும் சர்ச்சையும்

கொரோனா  காரணமாக உயிரிழக்கின்றவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.  அவரது அறிவிப்பு பலத்த வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக பாராளுமன்றத்திலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் அந்த அறிவிப்பை வரவேற்றனர். 

அதேபோன்று சர்வதேச ரீதியிலும் பிரதமரின் அறிவிப்புக்கு ஒரு வரவேற்பு கிடைத்தது.  இலங்கை வரவிருக்கின்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்  அறிவிப்பை வரவேற்றார்.  அதேபோன்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரும்  பிரதமரின் அறிவிப்பை வரவேற்றிருந்தார்.

எனினும் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், நிபுணர் குழுவே   அது தொடர்பாக இறுதியாக தீர்மானிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.   இதனால் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை சர்ச்சை நிலை ஏற்பட்டது.

எப்படியிருப்பினும் இது அரசாங்கத்தின் ஒரு பாரியதொரு நகர்வாக காணப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான விவாதம் 24ஆம் திகதி ஜெனிவாவில் இடம்பெறும். 

அது மட்டுமன்றி மார்ச்  மாத நடுப்பகுதியில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணையை ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

அந்தப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு பேரவையில் நடைபெறும்போது, அதில் உறுப்பினர்களாக உள்ள முஸ்லிம் நாடுகள் இந்த சடலம் புதைப்பு  விவகாரத்தினால் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்ற ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.  அந்த நகர்வை முறியடிக்கும் ஒரு நோக்கமாகவே இந்த  சடலங்களை புதைக்க அனுமதி வழங்கும் தீர்மானம்  முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகிறது.   

பாக்கிஸ்தானிடம் ரவூப், ரிஷாத் கேட்டுக்கொண்டது

கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை பாக்கிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனியாகவும், அ.இ.ம.கா.இன் தலைவர் ரிஷாத் பதியுதீன் பரிவாரங்களுடனும் சென்று சந்தித்திருந்தார். 

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டக்  தற்போது இஸ்லாமபாத்தில் உள்ளார். இவர் பெரும்பாலும் பிரதமர் இம்ரான்கானுடன் அல்லது அவர் வருவதற்கு முன்னதாகவே இங்கு வருகை தரவிருக்கின்றார்.  இந்நிலையில் பிரதி உயர்ஸ்தானிகரைச் தனித்தனியாகச் சந்தித்த ரவூவ் மற்றும் ரிஷாத் ஆகியோர் ஜனஸா எரிப்பு பற்றியே அதிகநேரம் கருத்துக்களை பகிர்ந்ததாக தகவல். 

அரசாங்கம் ஜெனிவா விடயத்தில் பாக்கிஸ்தானின் உதவியைக் கேட்டால், அதற்கு பதிலாக ஜனாஸா விடயத்தினை பயன்படுத்துமாறு வலியுத்தியிருக்கின்றார்களாம். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 'இடம்மாறி' நிற்கையில் அவர்களை வெட்டிவிடாது பிரச்சினையை தாங்களே தீர்த்து, அவர்களையும் இணைத்துப் பயணிக்க இப்படியொரு முயற்சியை இருவரும் எடுத்திருப்பதாகத் தகவல்.

பதுங்கிய கலையரசனும், சீறிய சிறிதரனும்

பொத்துவில் முதல் பொலகண்டி வரையிலான பேரணியின்போது நடைபெற்ற பிச்சல் பிடுங்கல்கள் ஏராளம். யார் பெரியவர் என்பதே அனைத்துக்கும் அடிப்படை. இவற்றைக் கடந்து பேரணி வெற்றிபெற்றது. ஆனால் இறுதி நாளில் கிளிநொச்சியில் பேரணி ஆரம்பித்தபோது ஒரே கட்சியைச்சேர்ந்த இருவர் முட்டுப்பட்டிருக்கின்றார்கள். 

கிளிநொச்சியை தன் கோட்டையாக கருதும் சிறிதரன் முன்னிலையில் சுமந்திரன் பொத்துவிலில் தடைகளை உடைத்து பேரணி ஆரம்பத்ததை மையப்படுத்தி 'நாம் தான் எல்லாம்' என்று உரைத்திருக்கின்றார். 

இதனால் கொதிப்படைந்த சிறிதரன் 'நீங்கள் எங்களுக்கு சொல்லாமல் செய்தால் நாங்கள் என்ன செய்வது' என்று கூறியிருக்கின்றார். இந்த கூற்றுக்கள் தர்க்கமாகின. சுமந்திரன் ஒருவித புன்னகையுடன் “உங்களுக்கு அரசியல் பீடக் கூட்டத்தில் கூறினேன், யாழ்.ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்வைத்து” கூறினேன் என்று பேரணி அறிவிப்பு பற்றி சிறிதரனுக்கு பதிலுரைத்திருக்கின்றார். 

எனினும் சீற்றமடைந்த சிறிதரன், “நீங்கள் எதனையும் கூறவில்லை. உங்கள் தனி முடிவில் செயற்பட்டு விட்டு இப்போது பெருமை பேசாதீர்கள் என்று கூற, 

இதற்கு சுமன்திரன் என்னை யாரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கவில்லை. நான் எம்.பியாக இல்லை. பொதுமகனாகவே கலந்துகொண்டிருக்கின்றேன். இந்த மண்ணில் நான் விடுத்த அழைப்பால் என்னை நேசிப்பவர்கள் வந்திருக்கின்றார்கள்” என்று கூறவும்; அருக்கில் நின்றவர்கள் விடத்தினை முடித்து வைத்திருக்கின்றார்கள். இந்த இடத்தில் இருந்த ஆர்னோல்ட் கடைசிவரையில் ‘கப்சிப்’ ஆக இருந்திருக்கின்றார்.

இதனைத்தொடர்ந்து பேரணி இறுதி நிலையை எட்டியபோது கடற்கரையை அண்மித்து அமர்ந்திருந்த சுமுந்திரனிடம் சென்று கலையரசன் 'அண்ணே இங்கு ஏதோ அரசியல் நடக்கிறது. பேரணி இரண்டாகிறது. உங்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்' என்று கூறியிருக்கின்றார். உடனே சுமந்திரன் வழங்கிய கடுமையான 'டோசால்' சற்று ஆடிப்போய்விட்டார் கலையரசன். 

அந்த இடத்தினை விட்டு உடன் அகன்று செய்வதறியாது திகைப்புற்று இருந்திருக்கின்றார். பாவம் அவர், பொலிகண்டியில் இடம்வலம் தெரியாமையால் கிழக்கு நண்பர்கள் வரும் வரையில் காத்திருந்து பின்னர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு அம்பாறை திரும்பியிருக்கின்றார். அதன்போது தனது மனக்கிடக்கையையும் இறக்கி வைத்திருக்கின்றார்.

சுமந்திரன் ‘சுமைதாங்கி’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி கருத்துக்களை வெளியிட்டதால் எழுந்த சர்ச்சைகளே கடந்த தேர்தல் பின்னடைவுகளுக்கு ஒரு காரணம் என்பது கூட்டமைப்பின் பங்காளிகளின் குற்றச்சாட்டு. அதனால் பேச்சாளர் பதவியை அவரிடத்தில் இருந்து 'பிடுங்கி' விட வேண்டும் என்பது அவர்களின் 'கிடுக்குப்பிடியான' கோரிக்கை.

கூடவே, பாராளுமன்றில் பேசுவதற்கு பங்காளிகளுக்கு நேரம் ஒதுக்குகிறார் இல்லை என்ற குற்றச்சாட்டுக்களுடன் கொரடா பதவியில் இருக்கும் சிறிதரனையும் நீக்க வேண்டும் என்பதும் பங்காளிகளின் திட்டம். இதற்கான முயற்சிகளையும் அவர்கள் எடுத்திருந்தனர். 

ஒரு கட்டத்தில் பெருந்தலைவர் சம்பந்தனைக்கூட பங்காளிக்கட்சிகள் சம்மதிக்க வைத்து பத்திரிகைக்கு செய்திகளையும் வழங்கியிருந்தன.  ஆனால்,  பதவி நிலைகளில் எவ்விதமான மாற்றமும் இடம்பெறவில்லை. குறிப்பாக பங்காளிக்கட்சிகள் இலக்கு வைத்த சுமந்திரன், பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு பதிலாக நேரெதிரான நிலைமைகளே ஏற்பட்டிருக்கின்றன.

அதாவது, சிறிதரன்  கொரடா பதவியை துறந்துவிட்டார். தற்போது அப்பதவி வெற்றிடமாகவுள்ளது. இதனைவிட கொரோனா காலம் என்பதால் மூத்த தலைவர் சம்பந்தன் பாராளுமன்றுக்கு வருவதும் குறைவு.  இதனால் சுமந்திரன் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் என்ற பதவியை அவ்வவ்போது வகிப்பதோடு தற்காலிக கொராடாவாகவும், பேச்சாளராகவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

ஏற்கனவே தமிழரசுக்கட்சியில் வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பு, பிரதி பொதுச்செயலாளர் என்ற பதவிகளும் இவரிடத்தில் உண்டு. ஆக இப்போதைக்கு சுமந்திரன்  தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் 5 பதவிகளைச் சுமக்கும் சுமைதாங்கி தான்.

பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நிலைமைகள் சுமூகமாக இல்லை. அங்கும் சம்பிக்க அணி, சரத் அணி என்று இரண்டு உருவாகும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. சஜித்துடன் ஆரம்பத்திலிருந்து தோளோடு தோள் நிற்கும் இம்தியாஸை தவிசாளராக ஆக்க வேண்டும் என்பதே அடிப்படை நிலைப்பாடாக இருந்தபோதும் ஈற்றில் சரத்பொன்சேகா அதனை தட்டிப்பறித்துக்கொண்டிருக்கின்றார். 

இம்தியாஸ் சிறுபான்மை தேசிய இனமாக இருப்பதுவும் ஒரு காரணம் என்கிறது தகவலறிந்த வட்டாரங்கள். 

ஆனாலும், மென்மையான சுபாவம் கொண்ட இம்தியாஸ் இந்த விடயத்தில் சரத்தை ஒரு ‘பிடி’ பிடித்துவிட்டார். ஆனால் எதுவும் மாறவில்லை. பின்னர் சரத் முக்கிய பதவிக்கு வந்தமையால் சம்பிக்கவின் இடம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. சம்பிக்கவுக்கு நிலைமை புரிந்துவிட்டது. 

ஹெல உறுமயவிலிருந்து விலகியவர் 43ஆம் படை அணியை ஆரம்பித்திருக்கிறார். மறுபக்கத்தில் சஜித் சம்பிக்கவை சமாதானம் செய்வதற்கு குழுவொன்றை நியமித்திருக்கின்றார். குழு, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. விரைவில் முடிவு வரும். அதுவே பூகம்பமா இல்லை அமைதியா என்பதை தீர்மானிக்கப்போகின்றது.