(ஆர்.ராம்)

போரின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிடம் நான் அன்று கேள்வியெழுப்பி இருந்தேன் என்று அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ராப் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த “இலங்கை : நீதி, சட்டம் ஒழுங்கு, மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான தேடல்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஐ.நா.வின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் சார்ல்ஸ் பீட்ரே, ஐ.நா.வின் முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பப்லே டி கிறீப் ஆகியோரும் இலங்கையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முஸ்லிம்காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ், மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன்சேகா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், சமாதானம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் செரீன்  ஷரூர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த கலந்துரையாடலை, இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரையின் பணிப்பாளர் மெலிஷா ட்ரிங் வழிநடத்தியிருந்தார்.

இதில் கலந்துகெண்ட ஸ்டீபன் ராப் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பாக கடந்த காலத்தில் இலங்கையின் கடப்பாடுகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளவை மீண்டும் உறுதி செய்யப்படும் வகையில் அந்த தீர்மானங்கள் அமைய வேண்டும்.

நான் பதவிநிலையில் இருந்தபோது 2012 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தேன். அந்த விஜயத்தின் போதான சிலவிடயங்களை மீள நினைவு படுத்த விரும்புகிறேன்.

சர்வதேச ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கடப்பாடு எமக்குள்ளது. எமது சகபாடிகள் என்ற அடிப்படையில் அந்தச் செயற்பாட்டை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்நிலையல் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டிருக்குமானால் அது குறித்த உண்மைகள் மற்றும் நீதியை கண்டறிவதற்கான உரிமைகள் அனைவருக்கும் உள்ளது.

அந்த அடிப்படையில் நான், இலங்கைக்குச் சென்றதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்றபோது அங்கு பெண்கள் குழுவினர் வலிந்து காணமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் படங்களை தாங்கியவாறு இருந்தார்கள். அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அன்று பெண்கள் குழுவொன்று காணமலாக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளின் படங்களை காண்பித்தார்கள். அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு தரப்புக்களுடனோ தொடர்பற்றவர்கள் என்றும் அவர்கள் கூறினார்னாள்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் மே மாதத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை கண்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிடடனர். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே மாதத்தின் பின்னரும் அவர்களை பார்த்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது உள்ளதாகவும் அந்தப் பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

அதன்போது, அவர்களுடைய விடயத்தில் நான் அக்கறை காட்டுவதாகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் செயற்பாட்டில் தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படுவதாகவும் அவர்களிடத்தில் உறுதியாக கூறிவிட்டு வந்திருந்தேன்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அந்த பெண்கள் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தப்பட்டதாக அறிந்தேன். அவர்களில் ஒருவர் படையினரால் துன்புறுத்தப்பட்டதாகவும் எனக்கு தகவல் கிடைத்ததோடு தமது அன்புக்குரியவர்களுக்காக குழுமியிருந்த அந்தப் பெண்களை சிறையில் அடைக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் நான் அறிந்து கொண்டேன்.

அவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பாக அந்த பெண்கள் கூறுகையில்,

“ எங்களைக் கொலை செய்வதன் ஊடாக எமது அன்புக்குரியவர்கள் குறித்த உண்மைகளை மறைப்பதற்கு முயலுகின்றர்கள் என்றால் எங்களை கொலை செய்து விடுங்கள்” என்று கருத்து வெளியிட்டதாக எனக்கு மொழிபெயர்ப்பில் உதவியவர் தெரிவித்தார்.

தமது அன்புக்குரியவர்களுக்காக உலகில் உள்ளவர்கள் வலியுறுத்தும் விடயம் இவ்வாறாகவே உள்ளது.

அடுத்த முக்கிய விடயமாக இருப்பது, வன்முறைகளும் குற்றங்களும் தொடர்ந்து கொண்டிருப்பதாகும்.

இவ்வாறான நிலைமைகள் தொடராது மீள நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக அமெரிக்கா தந்திரோபயமாக செயற்பட்டது. அதாவது, இலங்கையின் அதிகாரிகள் அவர்களுக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதை வலியுறுத்துவதே ஆகும். மூன்று வருடங்களாக இந்த நோக்கத்திலேயே நாங்கள் செயற்பட்டிருந்தோம்.

ஆனால், இந்த விடயங்கள் மிகவும் கடினமானவை. இந்த விடயங்களிலிருந்து நாங்கள் நகர வேண்டும். இவை தேசத்தின் வீரர்களை தனிமைப்படுத்தும். நாங்கள் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுவதை நான் செவிமடுத்திருந்தேன். அதன்போது வன்முறைகள் தொடர்கின்றன என்பதையும் ஆட்கள் கடத்தப்படுதல், குற்றங்கள் நீடித்தல், ஊழல்கள் தொடர்தல் ஆகியவற்றை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அத்துடன் முன்னர் இடம்பெற்ற சட்டவிரோத சம்பவங்களுடன் வன்முறைகளுடன் தொடர்புடைய அதேநபர்கள் தொடர்ச்சியாக அதே குற்றங்களில் ஈடுபடுகின்றனர். குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை விலக்களக்கப்படுகின்றது. இதுவொரு தொற்று நோய் போன்று காணப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்டேன்.

அப்பாவிகளை கொலை செய்தால் தண்டனைகளிலிருந்து தப்பலாம் அல்லது சரணடைந்தவர்களை கொலை செய்தால் தண்டனைகளில் இருந்து தப்பலாம் என்பதையே இவை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.

மிக முக்கியமாக இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கூட தண்டனையில் இருந்து விடுபட முடியும் என்ற நிலைமையும் காணப்பட்டது. கடந்த சில வருடங்களாக முக்கிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அவை நிறைவுக்கு வந்த போருடன் தொடர்பு பட்டதல்ல. அக்காலத்தில் இடம்பெற்றவையாக இருக்கின்றன.

உதாரணமாக திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை குறிப்பிட முடியும். 11 அப்பாவி பாடசாலை மாணவர்கள் ஆயுத மோதல்களுடன் எந்தவிதமான தொடர்புகளையும் கொண்டிருக்காதவர்கள். ஆனால் இவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசியல் காரணங்களும் இல்லை.

இவர்களை கப்பம் பெறும் நோக்குடன் இலங்கையின் பல அதிகாரிகள் தொடர்பு பட்டு கடத்தியுள்ளனர். திருகோணமலை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் என்ன நடந்தது என்பது வெளிவரவில்லை.

இருப்பினும் பல தடைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தனர். ஆனால் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இந்த விவாகரம் உட்பட பல நீதி வழங்க வேண்டிய விடயங்கள் மௌனிக்கப்பட்டுள்ளனமையை நாங்கள் அவதானிக்க கூடியதாக உள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிகவும் வலுவானதொரு அறிக்கையை தயாரித்துள்ளார். அதற்கு எனது வரவேற்பினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேநேரம், சாட்சியங்களின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான ஆவணப்படுத்தல்கள் செய்ய வேண்டியதும் அவசியமானது. புள்ளிகளை இணைக்கும் வகையிலான ஆவணங்களை தயாரிப்பதும் அவற்றை நீதிக்கான செயற்பாட்டின்போது பொருத்தமான வேளைகளில் பயன்படுத்துவதும் முக்கியமானதாகின்றது.

இதேவேளை, போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பில் எழுப்பபட்ட வினாவொன்றுக்குப் பதிலளித்த ஸ்டீபன் ராப் கூறுகையில்,

போரின்போது படையினரிடத்தில் சுமார் 260பேர் வரையில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் சரணடைந்துள்ளமைக்கு சாட்சியமாக அவர்களின் உறவினர்கள் இருக்கின்றார்கள். முரண்பாட்டு வலயத்தில் வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதற்கான வலுவான சான்றுகளும் உள்ளன. ஆகவே சரணடைந்தவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ விடத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதன்போது அவர் மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். உள்ளிட்ட வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தினார்.

சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. சிறுவர்கள் கடத்தப்படுவதும் பஸ்களில் படுகொலை செய்யப்படுவதும் மிக மோசமான சம்பவங்கள். அவற்றுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

விசாரணை முன்னெடுத்தல் என்பது தண்டனை அளித்தல் அல்ல. மாறாக, மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதாகும்.பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இலங்கையில் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது. அதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன. ஆகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதற்கு அப்பால் சித்திரவதைகள் இடம்பெறாமை, பாலியல் துஷ்பிரயோகங்கள் நிகழாமை, ஊழல்கள் நிறுத்தப்படல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு ஜனநாயக விழுமியங்கள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.