மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தாராபுரம் கோரக்குளம் பகுதியில் தாராபுரம் கமக்கார அமைப்பினால் செய்கை பண்ணப்பட்ட  பெரும் போக நெல் அறுவடையானது  இன்று (15.02.2021) காலை 08.00 மணியளவில் நடை பெற்றது. 

மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எல்.எம் சுகூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட் ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டு நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

மன்னார் நகர்ப்பகுதி முழுவதும் உவர் நீராக கணப்படும் பகுதியில் வெற்றிகரமாக நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைசெய்யப்படுவது தொடர்பாக தாராபுரம் கமக்கார அமைப்பினர் கருத்து தெரிவிக்கும் போது தாராபுரம் கோரக்குளம் பகுதியை அண்டிய விவசாய காணியில் ஏ.ரி.308 என்னும் நெல்லினம் 80 ஏக்கரில் பயிர் செய்கை  மேற்கொண்டிருந்தோம்.

அண்மையில் தாக்கிய புரேவி புயல் அதனுடன் கூடிய மழை காரணமாக  அனைத்து அனைத்து பயிர்களும் அழிந்து அதில் காப்பாற்றப்பட்ட மூன்றரை ஏக்கர் பயிர்களே இன்று திங்கட்கிழமை அறுவடை செய்யப்படுவதாக தாராபுரம் கமக்கார அமைப்பினர் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,மன்னார் பிரதேச செயலாளர் மா.பிரதீப்  ,விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் தாராபுரம் கமக்கார அமைப்பினரும் கலந்து கொண்டனர்.