(செ.தேன்மொழி)
மொனராகலை பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு தோட்டாக்களை வெளியேற்றக் கூடிய வகையில் துப்பாக்கியொன்றை தயாரித்து வைத்திருந்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மொனராகலை பகுதியில் நேற்று பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரி - 56 ரக துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த துப்பாக்கியில், ஒரே நேரத்தில் இரு தோட்டாக்களை வெளியேற்றக் கூடிய வசதியும் காணப்படுகின்றதெனவும்,  வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான இளைஞர் தொடர்பில் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்