(ரொபட் அன்டனி) 

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க என்னதான் கூறினாலும் ஜீ.ஐ குழாய்களை கொள்வனவு செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  தவறு செய்திருக்கிறார்.  அதனை நான் மிகவும் தெ ளிவாக கூறுகின்றேன். இந்த விடயத்தில் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு எந்த தவறும் செய்யவில்லை என்று    அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான    ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதாவது ஜீ.ஐ குழாய்களை கொள்வனவு செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  தவறு செய்யவில்லை என்றும், இதில்  நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு தவறு இழைத்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளாரே இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து என்ன என்று ஊடகவியாலளர்கள் கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில்  அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

பஷில் ராஜபக்ஷ இவ்வாறு ஒரு பிரதேச சபைக்கு 600 ஜீ.ஐ குழாய்களை கொள்வனவு செய்வதற்கான திட்டத்தை கொண்டு வந்தபோது நான் கடந்த அரசாங்கத்தின்  அமைச்சரவையில் இருந்தேன். அப்போது இதற்கான நிதி திவிநெகும திணைக்களத்திலிருந்து பெறப்படும் என்று கூறப்பட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். எனினும் அப்போது நான் அரசாங்கத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டிருந்ததால் வாய்திறக்காமல் இருந்துவிட்டேன். 

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் வழங்கப்பட்ட இந்த ஜீ.ஐ குழாய்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு அரசாங்க நிதியை பயன்படுத்தியது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத தவறாகும். அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க என்னதான் கூறினாலும் ஜீ.ஐ குழாய்களை கொள்வனவு செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  தவறு செய்திருக்கிறார்.  அதனை நான் மிகவும் தெ ளிவாக கூறுகின்றேன் என்றார்.