ஈரானிய எல்லையிடான ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள இஸ்லாம் காலா கிராசிங்கில் எரிபொருள் டேங்கர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தானது சனிக்கிழமை ஏற்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற 500 க்கும் மேற்பட்ட லொறிகளும் பெரும் தீ விபத்தில் சிக்குண்டதாக ஆப்கானிய அதிகாரிகள் மற்றும் ஈரானிய அரசு தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு வெடிப்புகள் நாசா செயற்கைக்கோள்களால் விண்வெளியில் இருந்து கண்டுபிடிக்கப்படும் அளவுக்கு சக்திவாய்ந்தவையாக அமைந்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் (காலை 8.40 GMT) ஒரு வெடிப்பு பதிவானது, அடுத்தது அரை மணி நேரம் கழித்து 1.42 மணிக்கு (காலை 9.12 GMT) மற்றுமோர் வெடிப்பு பதிவானது.

வெடிப்புக்கு என்ன காரணம் என்று உடனடியாகத் தெரியவில்லை.

ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் டிரக் சாரதிகளை மேற்கோள் காட்டி இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற 500 க்கும் மேற்பட்ட லொறிகள் எரிந்துவிட்டதாகக் கூறியது. 

நிலைமையை கண்காணிக்கும் ஒரு மேற்கு அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், அனர்த்தத்தில் குறைந்தது 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். ஆப்கானிய அதிகாரிகள் குறைந்த எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கையை வழங்கினர், ஆனால் அந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறினார்.

அதேநேரம் விபத்தில் 50 மில்லியன் ‍அமெரிக்க டொலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

ஈரானிய அதிகாரிகள் தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை எல்லையைத் தாண்டி அனுப்பினர், அதே நேரத்தில் எல்லை நகரமான இஸ்லாம் காலாவில் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு முன்னர் ஏராளமான உள்ளூர் மக்கள் தீக்காயங்களுக்குள்ளாகினர்.

மேற்கு மாகாணமான ஹெராத்தின் ஆளுநர் வாகீத் கட்டாலி, ஆப்கானிஸ்தானில் ஈரானிய அதிகாரிகள் மற்றும் நேட்டோ தலைமையிலான பணியாளர்கள் தீயைக் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டார். இது மின்சார உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதுடன்  மாகாணத்தின் தலைநகரத்தின் பெரும்பகுதியை மின்சாரம் இல்லாமல் ஆக்கியது.