(ஆர்.யசி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக பிரயோக்கிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் விதமாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு தற்போதே அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

Image result for சரத் வீரசேகர virakesari

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் கடந்த கால பொறுப்புக்கூறல்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ள நிலையில், இம்முறை இலங்கைக்கு நெருக்கடியான நிலைமை ஒன்று உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்,

ஜெனிவாவில் கொண்டுவரப்போகும் புதிய பிரேரணையை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இப்போது வரையில் சீனாவின் முழுமையான ஆதரவுடன் ரஷ்யா, கியூபா நாடுகளின் ஒத்துழைப்புகளை இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இதற்கு முன்னர் 30/1 பிரேரணையை கொண்டுவந்த வேளையில் அதற்கு எதிராக வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை புதிய நகர்வுகளை கையளவே ஆராய்ந்து வருவதுடன், அதிகளவில் இலங்கையின் சார்பில் பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் புதிய பிரேரணை அடிப்படையற்ற ஒன்றாக முன்வைக்கப்படவுள்ளது.

எனவே இது குறித்து வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைப்பார் எனவும் அமைச்சர் வீரசேகர கூறினார்.

இந்நிலையில் ஜெனிவா பிரேரணையில் இலங்கையின் பக்கம் ஆதரவை தக்கவைத்துக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். தற்போது பல நாடுகளுடன் பேசியுள்ளதாகவும், 23 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுவார்த்தை நகர்வுகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.