(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 357 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 75 209 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 68 696 பேர் குணமடைந்துள்ளதோடு 6123 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேலும் ஒருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒருவருக்கு தொற்றுறுதி

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் செயலகம்சார் இந்திய  பணியாளர் ஒருவருக்கு நேற்று சனிக்கிழமை கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பணியாளர் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தரின் குடும்ப அங்கத்தவர்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தரின் கடமைகளுக்கு அமைவாக அவர் பெரும்பாலான உயர் ஸ்தானிகராலய பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பினைக் கொண்டிருக்கும் அதேவேளை உத்தியோகபூர்வ பணிகள் நிமித்தம்  வெளியாட்களுடன் தொடர்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

ஆனாலும் உயர் ஸ்தானிகராலயத்தில் குறித்த உத்தியோகத்தரின் முதல் தொடர்பாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன்  நிர்ணயிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நியமங்களுக்கு அமைவாக முற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

உயர் ஸ்தானிகராலய வளாகம் தொற்று நீக்கப்பட்டிருக்கும் அதேவளை உரிய நெறிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 நிலைமை காரணமாக உயர் ஸ்தானிகராலயம் குறைந்த வலுவுடன் இயங்கிவரும் அதேவேளை சுழற்சி முறையிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

வினைத்திறன் மிக்க வகையில் கொவிட் 19 க்கு எதிராக போராட இலங்கைக்கு சகல சாத்தியமான வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை பதிவான மரணங்கள்

நேற்று சனிக்கிழமை மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்வடைந்துள்ளது.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண்னொருவர் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண்னொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, கொவிட் நிமோனியா மற்றும் இதய நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆணொருவர் கடந்த 13 ஆம் திகதி வதுபிட்டிவல வைத்தியசாலையில் கொவிட் தொற்று , நுரையீரல் பாதிப்பு, முச்சிழுப்பு, உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண்னொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் இதய நோய் தீவிரமடைந்தமையால் உயிரிழந்துள்ளார்.

கண்டியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆணொருவர் கண்டி பொது வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் இதய நோய் மோசமடைந்தமையால் உயிரிழந்துள்ளார்.

நாரங்கொட பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆணொருவர் ஹோமாகட ஆதார வைத்தியசாலையில் கடந்த 13 ஆம் திகதி கொவிட் நிமோனியா , தீவிர நீரிழிவு நோய் உயர் இரத்த அழுத்தம் , சிறுநீரக நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.