(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் , புதிதாக 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கொவிட்-19 வைரஸ் கொத்தணியின் காரணமாக வைரஸ் தொற்றுக்குள்ளகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்த போதிலும் , இன்று ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கமைய 14 விளக்கமறியல் கைதிகள் உட்பட 15 கைதிகளுக்கு இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  சிறைச்சாலைகளில் இதுவரையில் 154 அதிகாரிகள் உட்பட 4 ஆயிரத்து 694 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவர்களுள் 132 அதிகாரிகள் உட்பட 4 ஆயிரத்து 505 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை , வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 22 அதிகாரிகளும் , 155 கைதிகளும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் சிறைச்சாலைகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரையில் 10 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.