கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி இமயாணனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்றுள்ளமை நேற்றிரவு கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் தனது உடுப்பிட்டி இமயாணனின் உள்ள வீட்டடிற்குத் திரும்பியுள்ளார்.

அவரது பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே, அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடமாகாணத்துக்கு வெளியே தங்கியுள்ளவர்கள் பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு இங்கு வருவதைத் தவிர்க்கவேண்டும் எனவும்,  அவசர தேவையால் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தால், சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவலை வழங்கி சுயதனிமைப்படுத்தல் விதிகளை மதித்து வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும்” என்றும் வடமாகாண  சுகாதார  சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.