சி.அ.யோதிலிங்கம்

கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழ் சிவில் சமூகத்தின் “பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை” பேரணி சிறிய அசம்பாவிதங்களுடன் இனிதே முடிவுற்றுள்ளது. பத்து அம்சக்கோரிக்கைகளுடன் எழுச்சிப்பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

பேரணியை ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்க்காத வகையில் உணர்வு பூர்வமாக பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். பேரணியைப் பார்த்து ஆட்சியாளர்கள் மூக்கில் மேல் விரல் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

பேரணியை அச்சுறுத்திக் கட்டுப்படுத்த முனைந்த படைத்தரப்பு வெறும் கடதாசி போல ஒடுங்கிப்போயுள்ளது. பேரணியில் கலந்து கொண்டவர்களில் அழைத்து வரப்பட்டவர்கள் மிகக் குறைவு. தாமாக வந்தவர்களே அதிகம்.

இந்தப் போராட்டம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் முதலாவது இது கிழக்கிலிருந்து உருவான கிழக்கு மையப் போராட்டமாகும். பொதுவாக தமிழ்த்தரப்பின்  போராட்டங்கள் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்குக்கு பரவுவதே வழமையானதாகும்.

1956ஆம் ஆண்டு திருமலை யாத்திரை மட்டும் சற்று விதிவிலக்காக இருந்தது. அது ஒரே நேரத்தில் சமாந்தரமாக வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டு திருமலையை அடைந்தது. 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டம் வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே கிழக்கிற்கு விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட “எழுக தமிழ்” பேரணி வடக்கில் நடத்தப்பட்ட பின்னரே கிழக்கில் நடத்தப்பட்டது.

ஆனால், பொலிகண்டி நோக்கிய போராட்டம் கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதோடு கிழக்கு இளைஞர்களே பிரதான ஏற்பாட்டாளர்களாக விளங்கினர். பேரணியின் ஆரம்பத் தடைகளை உடைத்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு துணிவை வழங்கியவரும் கிழக்கு அரசியல்வாதியான சாணக்கியனே.

முதலாவது முக்கியத்துவம் மேய்ச்சல் தரை விவகாரம், கிழக்கு தொல்லியல் செயலணியின் அடாவடித்தனம், அரசு சார்பு தமிழ் அரசியல்வாதிகளின் தமிழ்த்தேசிய எதிர்ப்புப் பிரசாரங்கள் என்பவற்றை முறியடிப்பதற்கு கிழக்கு தமிழ்த்தேசியவாதிகளுக்கும் இவ்வாறான போராட்டம் அவசியமாக இருந்தது.

இது இன்னோர் செய்தியையும் கூறியது. தமிழ்த்தேசிய போராட்டத்திற்கு கிழக்கினாலும் தலைமை கொடுக்க முடியும் என்பதே அந்தச் செய்தியாகும்.

போராட்டம் ஆரம்பமானபோது இக்கட்டுரையாளரைச் சந்தித்த சில நண்பர்கள் இதன் பின்னணி குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு கட்டுரையாளர் கூறிய பதில் “இப்போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டம்; தவிர கிழக்கு இளைஞர்கள் இதனை முன்னெடுக்கின்றனர்; விமர்சனங்களுக்கப்பால் இதனை ஆதரிப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும்” என்பதாகும்.

இரண்டாவது முக்கியத்துவம் வடக்கு – கிழக்காக மக்கள் எழுந்து நின்றமையாகும். இன்னோர் வார்த்தையில் கூறுவதனால் தமிழர் தாயகமாக எழுந்து நின்றமையாகும். 

அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் அடிக்கடி கூறும் மேற்கொள் “வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லையெனின் தமிழர் தாயகம் இல்லை. தமிழர் தாயகம் இல்லையெனில் தமிழ்த் தேசியம் இல்லை. தமிழ்த்தேசியம் இல்லையெனில்  தமிழ் அரசியலுக்கு அர்த்தம் இல்லை” அண்மைக்காலமாக பலவீனமடைந்து வந்த இந்த மேற்கோள் தற்போது உயிர்ப்பு பெற்றுள்ளது.

சிங்கள – பௌத்த ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பு மூலமும், அரசு சார்பு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் மூலமும் கிழக்கை தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து அகற்ற பலத்த பிரயத்தனங்களை செய்துவந்தனர்.

இதற்காக தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டினைத் தீனி போட்டு வளர்த்தனர். கிழக்கு மாகாணசபையின் அதிகாரம் தமிழர் கைகளில் தரப்படும் என்று ஆசை காட்டினர். அவர்களது சதி முயற்சிகளையெல்லாம் இப்போராட்டம் ஆட்டம் காணச் செய்துள்ளது.

மூன்றாவது முக்கியத்துவம்,தமிழ்த்தேசியக் கட்சிகள்,தமிழ் மக்களின் பொது அமைப்புக்கள், சுயாதீனமாக இயங்கும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், புலம் பெயர் மக்கள், தமிழக மக்களென அனைவரையும் இப்போராட்டம் ஒன்றிணைத்தமையாகும். கட்சி முரண்பாடுகளுக்கப்பால் இப்போராட்டத்தில் அனைத்து தமிழ்த்தேசியக் கட்சிகளும் பங்குபற்றியிருந்தன.

அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் தம்மாலான பங்களிப்புக்களைச் செய்திருந்தனர். பங்களிப்புக்களில் அளவு வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றினுடைய பங்களிப்புக்களை குறைத்து விட முடியாது.

இதிலும் மிக முக்கியத்துவம் எல்லாவற்றிலும் முரண்பட்டு நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்பேரணியில் பாரிய பங்களிப்புடன் பங்குபற்றியமையாகும். அக்கட்சியின் பிரதிநிதிகள் ஆரம்பத்திலிருந்தே இதில் பங்குபற்றியதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் திருகோணமலையிலிருந்து ஒரு அணியாக பங்கு பற்றினர். கிளிநொச்சியிலிருந்து மக்களையும் அதிகளவில் கொண்டு வந்து இறக்கி பங்குபற்றச் செய்தனர்.

பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு எந்தவித நெருக்கடிகளையும் கொடுக்காமல் நாகரீகமாக தங்கள் பங்களிப்பைச் செய்தனர். பேரணியின் முன் வரிசைகளுக்கு அடிபடாமல் பேரணியின் நடுவில் அமைதியாக கோஷங்களை எழுப்பிக்கொண்டு வந்தனர்.

பேரணியின் முடிவில் கஜேந்திரகுமாரை பேச அழைத்தபோது மிக நாகரீகமாக “நான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை” நேரமாகி விட்டது பேரணியை சுமுகமாக முடித்து வையுங்கள்” எனக் கூறியிருந்தார்.

பேரணி முடிவடைந்து சில நாட்களின் பின்னர் பேரணி தொடர்பான தங்கள் விமர்சனங்களை முன் வைத்தாலும் அது எந்த வகையிலும் பேரணியின் முக்கியத்துவத்தை பாதிக்கவில்லை. கட்சிகளுக்கப்பால் பொது அமைப்புக்கள், சுயாதீனச் செயற்பாட்டாளர்கள்; என்போரும் தத்தம் நிலைகளிலிருந்து காத்திரமான பங்களிப்புக்களைச்  செய்திருந்தனர்.

இந்து, கிறிஸ்தவ இஸ்லாமிய குருமார்களின்; பங்களிப்பு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக வேலன் சுவாமிகளின் பங்களிப்பை வார்த்தைகளில் வர்ணித்துவிட முடியாது. பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை வெறும் காலுடன் அவர் பேரணியை வழிநடத்தினார். இது இந்துமத தலைவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தது.

தமிழர் அரசியல் வரலாற்றில் இவ்வாறு இந்து மதத் தலைவர் ஒருவர் இதுவே முதல் தடவை என்றுகூற வேண்டும். பொதுவாக இந்துமத தலைவர்கள் அரசியல், போராட்டம், என்பவையெல்லாம் தீண்டத்தகாது என்ற கருத்து நிலையிலேயே இருந்தனர்.

அருட்திருவேலன் சுவாமிகள் இந்த மரபை உடைத்தெறிந்திருக்கிறார். பெருந்தேசியவாத ஒடுக்குமுறை இந்துமதத்தின் இருப்பையும் இல்லாமல் செய்கின்றது என்பதை முன்னைய இந்து மதத் தலைவர்கள் பெரியளவிற்கு கவனத்தில் எடுக்கவில்லை.

கிறிஸ்தவ மத குருமார்கள் குறிப்பாக கத்தோலிக்க மத குருமார்கள் ஆரம்பக்காலம் தொட்டே தமிழ்த்தேசிய அரசியலுக்கு வலுவான பங்களிப்பைச் செய்து வந்தனர். அருட் தந்தை சிங்கராஜர் நீண்ட காலம் சிறை வாசமும் அனுபவித்திருந்தார். வணக்கத்திற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உலகமே வியக்கத்தக்களவிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருந்தார்.

ஒரு குறிப்பிட்ட காலம் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். தமிழ் சிவில் சமூக அமையத்திற்கு அவர் தலைமை தாங்கியமை அனைவரும் அறிந்ததே. தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கும், தமிழ்த்தேசிய சபை ஒன்றை உருவாக்குவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை. இதை விட பல கத்தோலிக்க மத குருமார்கள் படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நான்காவது முக்கியத்துவம், முஸ்லிம் மக்கள் உணர்ச்சியுடன் இப்போராட்டத்தில் பங்குபற்றியமையாகும். முஸ்லிம் மக்களின் திரண்ட பங்குபற்றுதலை சாத்தியமாக்கியவர்கள் சாணக்கியனும், சுமந்திரனும் தான்.

கஜேந்திரகுமாரின் பாராளுமன்ற உரைகளுக்கும் இதில் பங்குண்டு. முஸ்லிம்களின் பங்களிப்பிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று முஸ்லிம் தலைவர்கள் பலர் இருக்கக் கூடியதாக பாராளுமன்றத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆக்ரோசமாக குரல் கொடுத்தவர்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே.

 அதில் சாணக்கியனினதும், கஜேந்திரகுமாரினதும் உரைகள் வலிமையான தர்க்க, நியாயங்களைக் கொண்டிருந்தன. இதற்கு எதிராக முஸ்லிம்கள் கபன்துணிப் போராட்டத்தை நடத்தியபோது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளித்தனர்.

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” பேரணியின் பத்து அம்சக் கோரிக்கைகளில் ஜனாஸா எரிப்பு விவகாரமும் உள்ளடங்கியிருந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் முஸ்லிம்கள் வாழாத பிரதேசங்களில் கூட ஜனாஸா எரிப்புக்கு எதிராக கோஷங்களை வலுவாக எழுப்பினர்.

உண்மையில் ஜனாஸா எரிப்பு விவகாரம் முஸ்லிம் இன அழிப்பு விவகாரமே. ஒரு மக்கள் கூட்டத்தை ஒன்றிணைக்கும் காலாசாரத்தை அழிப்பதும் இன அழிப்பே.

உலக சுகாதார நிறுவனம் கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்யலாம் எனக்கூறிய போதும் இலங்கை ஆட்சியாளர்கள் எரிக்க முற்படுவது இன அழிப்பைத் தவிரவேறொன்றுமில்லை

அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பெருந்தேசிய வாத ஒடுக்குமுறையாகும். ஜனாஸா எரிப்புக்கு அப்பால் காணிப்பறிப்பு, பொருளாதார ஆக்கிரமிப்பு , திட்டமிட்ட வன்முறை போன்ற ஒடுக்குமுறைகளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ளன.

இந்த ஒடுக்குமுறைகளுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு ஒரு சாட்டாக ஆட்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது. ஒரு வகையில் குண்டு வெடிப்பைக் கூட ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஒடுக்கு முறைகளின் விளைவு எனலாம்.

இங்கு மிகவும் அருவருக்கத்தக்க விடயம் ஒரு முஸ்லிம் குழு செய்த குற்றத்திற்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முற்படுவதே.

முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் மதத் தலைவர்களும் சத்தியம் பண்ணாத குறையாக அந்த முஸ்லிம் குழுவிற்கும், அவர்களது நோக்கத்திற்கும் நாம் ஆதரவாக இல்லை என்று கூறியபோதும் கூட்டுத் தண்டனை வழங்க முற்படுகின்றனர். முஸ்லிம் சமூகம் இன்று எதுவும் செய்வதறியாது பயத்தில் உறைந்து போயிருக்கிறது.

தமிழ் மக்களும் இவ்வாறுதான் தண்டிக்கப்பட்டனர். ஆயுதப் போராளிகள் நடத்திய தாக்குதலுக்காக முழுத்தமிழ் மக்களுக்கும் பல தடவை கூட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இத்தனைக்கும் தமிழ் மக்களாவது ஆயுதப் போராட்டத்தினை ஆதரித்தனர். ஆனால், முஸ்லிம் மக்கள் முஸ்லிம் ஆயுதக் குழுவின் ஆயுத வழி முறையை ஆதரிக்கவில்லை.

ஐந்தாவது முக்கியத்துவம் மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கையையும் பேரணியின் இலக்குகளில் சேர்த்தமையாகும். மலையக மக்களுக்கு தங்களுடைய விவகாரங்களில் வடக்கு – கிழக்கு தமிழ்த் தரப்பு போதிய அக்கறை காட்டுவதில்லை என்ற மனக்குறை நீண்ட காலமாகவே உண்டு.

நூற்றுக்கணக்கான மலையக இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கு பற்றி தமது உயிர்களை அர்ப்பணித்தபோதும் அவர்களது பங்களிப்பு வலுவான வகையில் பேசப்படவில்லை என்ற குறையும் உண்டு. தவிர வடக்கு – கிழக்கில் வாழும் மலையக வம்சாவழியினர் போதிய கவனிப்புக்களை பெறுவதில்லை என்றும் பிரதிநிதித்துவ அரசியலில் அவர்களுக்கு நியாயமான பங்கு வழங்கப்படுவதில்லை என்றும் மனக்குறைகள் உண்டு. இந்தக்குறைகளை சிறியளவிலாவது இந்தப் பேரணி போக்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

புலம் பெயர் மலையக வம்சாவழி இளைஞர் ஒருவர் “மலையக மக்களும் திரளாக இப்போராட்டத்தில் பங்குபற்றியிருக்கவேண்டும் என்றும் குறைந்த பட்சம் மலையகத்தில் இதற்கான ஆதரவும் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும” என்றும் ஆதங்கப்பட்டார்.

இந்த ஆதங்கம் பெரியளவிற்கு பொருத்தமானதாக தெரியவில்லை. மலையகத்திற்கும் வட கிழக்கிற்கும் இடையே புவியியல் இடைவெளி உண்டு. எனவே, திரளாக பங்கு பற்றுதல் சாத்தியமில்லை.

மலையகத்தில் ஆதரவுப் போராட்டத்தை நடத்துவதும் உகந்தது எனக்கூற முடியாது. மலையகம் ஒரு சுற்றி வளைக்கப்பட்ட பிரதேசம். தவிர  தற்போது பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகமே ஆட்சியிலிருக்கின்றது.

இந்நிலையில், பெருந்தேசிய வாதம் மலையக மக்கள் மீது வன்முறைகளை அரசின் ஆதரவுடன் கட்டவிழ்த்து விட்டால் அவர்களைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும். மலையகத்தில் வாழும் மக்கள் பங்குபற்றாவிட்டாலும் வட – கிழக்கில் வாழும் மக்கள் மலையக வம்சாவழியினர் திரளாக பங்குபற்றியிருந்தனர்.

ஆறாவது ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் இப்போராட்டம் நடைபெற்றமையாகும். இக்காலத்தில் உலகின் கவனம் முழுவதும் இலங்கையிலேயே குவிந்திருக்கும். இதனால் தமிழ் மக்களின் குறைகளை உரத்துச் சொல்வது உலகக் கவனிப்பைப் பெறுவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கும்.

அதேவேளை, சர்வதேச அபிப்பிராயத்தையும் அது தமிழ் மக்களுக்கு சார்பாக உருவாக்கும். தவிர இக்கட்டுரையாளர் முன்னரும் பல தடவை கூறியது போல சர்வதேச அபிப்பிராயம் ஜனநாயக நீதிக் கோட்பாட்டின் படியே கட்டியெழுப்பப்படுகிறது.

இதற்கு தமிழ்த்தரப்பு உச்ச அளவில் ஜனநாயக நீதிக் கோட்பாட்டை பின்பற்றுவதாக காட்டவேண்டும். முஸ்லிம் மக்களையும், மலையக மக்களையும் போராட்டத்துடன் இணைத்தமை ஜனநாயக நீதிக் கோட்பாட்டின் படி தமிழ்த்தரப்பு இயங்குகின்றது என்பதற்கு வலுச்சேர்க்கின்றது.

பேரணி தடைகளை உடைத்தபோது ஆட்சியாளர்கள் மௌனமாக இருந்தமை ஒரு வகையில் ஜெனிவா பயம் என்றே கூறலாம். ஏற்கனவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையால் கோட்டாபய அரசாங்கம் ஆடிப்போயுள்ளது. இந்த விடயத்தில் நெருக்கடிகளைக் கூட்டுவது நல்லதல்ல என்று அரசு கருதியிருக்கலாம்.

மேற்கூறியவாறு பல முக்கியத்துவம் இப்போராட்டத்திற்கு இருந்தபோதும் பல போதாமைகள், குறைகளும் கூடவே இருந்தன அவற்றை இக்கட்டுரையில் விவாதிப்பது பொருத்தமானதல்ல.

போராட்டத்தின் முக்கியத்துவத்தை அது பலவீனப்படுத்திவிடும். எனவே இன்னோர் கட்டுரையில் இது பற்றி விரிவாக விவாதிப்போம். விமர்சனங்கள் இல்லாமல் ஒரு போராட்டம் ஒருபோதும் முன்னே செல்லமுடியாது.

எது எப்படியிருந்தபோதும் மொத்தத்தில் இப்போராட்டம் பலத்த அதிர்வுகளை இலங்கை அரசியலிலும், தமிழ் அரசியலிலும் உருவாக்கியுள்ளது. இதனால் இதனை தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். இப்போது எழும் கேள்வி இதன் அடுத்த கட்டம் என்ன?