இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் இ்ந்தியாவின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். 

இந்தியா ஓட்ட கணக்கை தொடங்கும் முன்பே விக்கெட்டின பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது. அதன்படி இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் சுப்மான் கில் டக்கவுட்டுடன் ஆலி ஸ்டோனின் பந்துப் பறிமாற்றத்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய புஜாராவுடன் ரோகித் சர்மா கை கோர்த்து அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். இந் நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 85 ஐ எட்டிய போது புஜாரா 21 ஓட்டங்களுடன் ஜாக் லீச்சின் பந்து வீச்சில் பென் ஸ்டோக்சிடம் பிடிகொடுத்தார்.

அடுத்து வந்த அணித் தலைவர் விராட் கோலியும் டக்கவுட்டுடன் மொய்ன் அலியின் சுழலில் சிக்கி கிளின் போல்ட் ஆனார்.

இதன்போது இந்திய அணி 86 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்திற்கு உள்ளானது.

அதன் பின்னர் ரோகித் சர்மாவுடன், அஜிங்யா ரஹானே இணைந்து அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். மதிய உணவு இடைவேளை வரை ரன் குவிப்பில் தீவிரம் காட்டிய ரோகித் சர்மா 78 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்றார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்த ரோகித் சர்மா மொய்ன் அலியின் சுழலில் ஒரு சிக்ஸரை விளாசித் தள்ளியதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.

மறு பக்கம் ரஹானேவும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு தெறிக்கவிட்டார். இவர்கள் ஆடிய விதம் இந்தியா அணிக்கு புத்துயிர் அளித்தது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் அந்த நம்பிக்கை வீண் போனது.

அதன்படி அணியின் ஓட்ட எண்ணிக்கை 248 ஆக உயர்ந்த போது ரோகித் சர்மா மொத்தமாக 231 பந்துகளில் 18 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக‍ 161 ஓட்டங்களுடன் ஜாக் லீச்சின் பந்து வீச்சில் மொய்ன் அலியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து ரஹானேவும் 67 ஓட்டங்களுடன் மொய்ன் அலியின் பந்து வீச்சில் கிளின் போல்ட் ஆனார்.

இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை குவித்தது.

ரிஷாத் பந்த் 33 ஓட்டங்களுடனும், அக்ஸர் படேல் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.