சுவாரஸ்யமான உரையாடல்களின் தொடக்கம், வினாடிக்கு வினாடி பரிமாறிக்கொள்ளும் பாசம், தும்மல் வந்தாலும், "நீ தானே என்னை நினைத்தாய்" என்ற ஏக்கம், எதனைப் பார்த்தாலும் காதலன் பூ முகம், எங்கோ தூரத்தில் அவன் பெயர் கேட்டதும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு, எந்நேரமும் அவன் குரல் கேட்க வேண்டும் என்ற மயக்கம், காதல் பாடல்கள் கேட்டதுமே தன்னை மறந்த சிரிப்பு...

இவ்வளவு இனிமையானதா "காதல்"? என்று எண்ணிக்கொண்டே நாட்கள் செல்ல... ஓயாமல் கதை பேசிய உறவுகள் சற்று வேலைப்பளுவுக்கு இடம் கொடுக்க ஆரம்பிக்கும்.

 தட்டச்சுடன் போட்டி போட்ட விரல்கள்,"சரி, என்ன அவசரம், பிறகு பதில் அனுப்பலாம்" என்று சமூக வலைதளத்தில் உலாவ ஆரம்பிக்கும். உடனுக்குடன் பரிமாறப்பட்ட தகவல்கள், அந்நாளின் சாராம்சமாக மட்டுமே சொல்லப்படும். 

இதை சரியென்றோ தவறென்றோ விவாதிக்க முடியாது. காரணம், இது "காதல்". ஆயிரம் கனவுகளோடு ஆரம்பிக்கும் உறவுகள் எதிர்பார்ப்புக்களால் விரிசலடைகின்றன. இதை விதி என்று விட்டு விடவும் முடியாது; சதி என்று தீர்வு காணவும் முடியாது; காரணம் இது காதல்.

பழகிய சில தினம் திகட்டத் திகட்ட தித்திக்கும் பாசத்தில் சௌர்கமாகும் நாட்கள்; நேரம் போவதுகூட தெரியாமல் மணிக்கணக்கில் தொலைபேசியில் ஒட்டிக்கொண்டிருந்த காதுகள் காலப்போக்கில் ஒரு நிமிடம் அந்த குரலை கேட்க முடியாதா என ஏங்கும்; இதுவே இடைவெளியின் ஆரம்பம். 

திகட்டும் அளவிற்கு அள்ளிக்கொட்டிய பாசம் அளவோடு கிள்ளிக்கொடுக்கப்படும். இது பிரிவா? இல்லை யதார்த்தமா? என குழம்பிக்கொண்டிருக்கும் மனமே கருத்து முரண்பாட்டிற்கு வித்து. 

ஆரம்பத்தில் போல் இன்று இல்லையே என பெண் மனம் ஏங்க, காதல் மட்டும் போதுமா நான் என்றும் உன்னோடுதான் என்று காதலுக்கு கொஞ்சம் விடுமுறை கொடுத்துவிட்டு அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்கும் ஆண் மனம். இவ்விரண்டிற்குமான இடைவெளியை குறைக்க போராடும் காலங்களில்தான் அடடா ஊடல்களுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை.

அப்படி எதை தான் எதிர்ப்பார்க்கின்றது; இந்த பாளாய் போன மனம்? காலை உன் குறுஞ்செய்தியோடு கண்விழித்து, உன் வழித்துணைக்காய் நான் ஒரு வார்த்தையும், என் வழித்துணைக்காய் நீ ஒரு வார்த்தையும், "சாப்டியா" என்ற சின்ன ஒரு அக்கரையும், அன்றைய நாளின் நினைவுகளை பகிர்ந்துக்கொள்ள கொஞ்ச நேரமும், இரவு உன் கொஞ்சலான இரவு வணக்கத்தோடு உறக்கமும் இவ்வளவு தான். 

இதற்காகவா இத்தனை ஏக்கங்கள்? இத்தனை ஊடல்கள்? இத்தனை சண்டைகள்? இத்தனை கோபங்கள், இவை அவ்வளவு விலை உயர்ந்தவையா? ஆம், இவை விலை கொடுத்து வாங்க முடியாத அளவு பெறுமதியானவை தான்; காரணம் இது "காதல்".

உலகம் எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்கு நீ, உனக்கு நான் என்ற உறவில், எதை எதையோ எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறது உணர்வுகள்; எத்தனையோ விதமான பரிசுகள் உலகில் இருந்தாலும், அன்புப் பரிசாய் காதலின் இதயம் கேட்பது இது தானோ? முடிந்தால் கொஞ்சம் தந்துவிடு உன் இருபத்து நான்கு மணித்தியாலத்தில் ஒரு சில வினாடிகளை மட்டும் எனக்கே எனக்காய், நம் காதலுக்காக.

- சங்கீதா என்டனி குமார்