நாடு முழுவதும் பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 1,572 நபர்கள் உட்பட மொத்தம் 3,880 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மணிநேரங்களில் 494 காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட சுமார் 16,500 பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது குற்றங்கள் தொடர்பாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததாக 983 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மேலும் 672 நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

அதேநேரம் இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமைக்காக எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்வாக்கின் கீழ் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக 518 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளதாக அஜித் ரோஹன கூறினார்.

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், குற்ற விகிதங்களைக் குறைப்பதற்காகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.