டோஹோகு கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகுதியில் 7.3 ரிச்டெர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக 'த ஜப்பான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

2011 மார்ச் நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுசக்தி பேரழிவின் 10 ஆவது ஆண்டு நிறைவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் ஆறு மாகாணங்களில் பதிவான இந்த நிலநடுக்கம் குறைந்தது 100 பேரை காயப்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் தோஹோகு பிராந்தியத்தில் மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களைத் தாக்கியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இதனால் விடுக்கப்படவில்லை. 

மியாகி, புகுஷிமா, இபராகி, டோச்சிகி, சைட்டாமா மற்றும் சிபா மாகாணங்களிலுள்ள மக்கள் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது, ஆனால் கடுமையான காயங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நாடு தழுவிய அளவில், குறைந்தது 950,000 வீடுகள் தற்காலிகமாக மின்சாரத்தை இழந்தன, எனினும் அவற்றுள் பெரும்பலான பகுதிகளுக்கான மின்சார விநியோகம் ஞாயிற்றுக்கிழமை காலை சீர் செய்யப்பட்டது.

டோக்கியோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, ஜப்பான் நேரப்படி சனிக்கிழமை இரவு 11:07 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டோக்கியோவிலிருந்து வடக்கே சுமார் 220 கிலோமீட்டர் (135 மைல்) தொலைவில் உள்ள புகுஷிமா கடற்கரையில் இந்த மையப்பகுதி இருந்தது. 

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டத்தில் நிலநடுக்கத்தில் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று கூறினார்.

2011 மார்ச் 11 அன்று அதே பிராந்தியத்தை தாக்கிய கிரேட் ஈஸ்ட் ஜப்பான் பூகம்பத்தின் பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று நம்பப்படுகிறது.