(எம்.மனோசித்ரா)

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வகை வைரஸ் இலங்கையில் எவ்வாறு உட்புகுந்தது ? தற்போது கூறப்பட்டுள்ள 4 பிரதேசங்களைத் தவிர வேறு பகுதிகளில் இந்த வைரஸ் பரவல் காணப்படுகிறதா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வகை வைரஸ் இலங்கையின் 4 பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கையில் இந்த வைரஸ் எவ்வாறு உட்புகுந்தது என்று ஸ்திரமாகக் கூற முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்தோடு நேற்று வியாழக்கிழமை இனங்காணப்பட்ட வைரஸ் தவிர வேறு வைரஸ் வகைகளும் இலங்கையில் பரவியுள்ளதா என்பது தொடர்பில் துரிதமாக ஆராயப்பட வேண்டும்.

தென் ஆபிரிகாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய வரை வைரசும் இலங்கையில் பரவியுள்ளதா என்று எம்மிடம் எவரேனும் கேள்வியெழுப்பினால் அதற்கு 'தெரியாது' என்று பதில் கூறக்கூடிய நிலைமையே காணப்படுகிறது.

இவை தொடர்பில் நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிய போதிலும் , சுகாதார அமைச்சு அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவல் இனங்காணப்பட்ட போது அங்கு முழு நாடும் முடக்கப்பட்டது. இதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அவர்களால் விரைவாகக் குறைக்கக் கூடியதாக இருந்தது.

அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் வெள்ளிக்கிழமை 13 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர். அங்கு புதிய வகை வைரஸ் இன்காணப்பட்டவுடன் உடன் அமுலாகும் வகையில் மெல்பன் நகரம் ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டது. நாமும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் வெளிநாடுகளில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பவற்றை அவதானித்து இலங்கைக்கு பொறுத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிய வைரஸ் பரவலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு சுகாதார அமைச்சிற்கு பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்றார்.