(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை  பெற்றுக் கொள்வதற்கு இந்திய நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது.

மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது. கிழக்கு முனையத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சியை மேற்குமுனைய விவகாரத்திலும்  முன்னெடுப்போம் என  அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின்  செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் துறைமுக தொழிற்சங்கத்தினர் கடுமையான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படாமலிருந்திருந்தால் அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியிருக்கும்  அனைத்து தரப்பினரது ஆதரவையும் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மைமிக்க அரசாங்கத்தை அடிபணிய வைத்துள்ளோம்.

கிழக்கு முனையத்துடன்  மேற்கு முனையத்தை ஒப்பிட முடியாது. கிழக்கு முனையமே பெறுமதியானது என அரசியல்வாதிள்  அரசியல் இலாபத்திற்காக குறிப்பிட்டுக் கொள்ளும் கருத்துக்களை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அரசியல்வாதிகள் ஒன்றும்  படித்த துறைசார் நிபுணர்கள் கிடையாது. அரசியல்வாதிகள் அனைத்து விடயங்களையும் அரசியல் இலாபத்துடன் ஆராய்வார்கள்.

கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு  இந்தியா ஆரம்பத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தாலும் தற்போது குறித்த  இந்திய நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை பெற்றுக் கொள்ள  இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்,புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகியது.

தேசிய வளங்களை பாதுகாக்கும் விடயத்தில் கிழக்கு முனையம் ,மேற்கு முனையம் என்ற வேறுப்பாடு கிடையாது. அனைத்து தேசிய வளங்களையும்  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு  உண்டு. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அனைத்தும் ஆட்சி காலத்தில் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் விற்றுள்ளார்கள்.இவ்விடயத்தில் தற்போதைய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமத்தை அரசாங்கம் இந்திய நிறுவனத்துக்கு வழங்க தீர்மானித்துள்ளது. கிழக்கு முனையத்தை பாதுகாத்ததை போன்று மேற்கு முனையத்தையும் பாதுகாக்க தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம். தொழிற்சங்க போராட்டம் தொடர்பில்  எதிர்வரும் வாரம் உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.