(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் ஆளுங்கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எனினும் வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது, 'கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் தொழிநுட்ப குழுவின் தீர்மானமே இறுதியானது.' என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே பிரதமரின் வாக்குறுதியை நிராகரித்து மாற்றுக் கருத்தை முன்வைத்தார்.

இதேவேளை ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவிலுள்ள பலரும் பிரதமரின் இந்த அறிவிப்பு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை என்பவற்றை மையமாகக் கொண்டு கொரோனா சடலங்கள் தொடர்பான சர்ச்சைக்கு சிறந்ததொரு தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்வரும் 22 ஆம் திகதி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதனை இலக்காகக் கொண்டதாகவே பிரதமரின் அறிவிப்பு அமைந்திருந்துள்ளது என்று கூறப்பட்ட போதிலும் , தற்போது இவ்விடயத்தில் ஆளுந்தரப்பிற்குள்ளேயே இருவேறு நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன.

எவ்வாறிருப்பினும் கலந்துரையாடல்கள் உள்ளிட்டவற்றினூடாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கு முன்னராகவே சடலங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் அரசாங்கம் தீவிர முயற்சியை முன்னெடுத்து வருகிறது.