மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்துள்ளமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசித்தது.

இதன்போதே, மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியன்மாரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொணடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் துணை ஆணையாளர் நடா அல்-நஷீஃப், 

‘மியன்மாரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கடுமையான உழைப்பின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தை அண்மையில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சீரழித்துவிட்டது. இதனை உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று எச்சரித்தாா்.

அதனைத் தொடா்ந்து பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் சமா்ப்பித்த வரைவுத் தீா்மானத்தில், கைது செய்யப்பட்டுள்ள மியான்மா் அரசின் தலைமை ஆலோசகா் ஆன் சாங் சூகி, அதிபா் வின் மயின்ட் மற்றும் ஏனைய அரசியல் தலைவா்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, 47 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு மியன்மார் மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நெருக்கடிகளை விதிக்க அதிகாரம் கிடையாது.  எனினும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பின்னர் இடம்பெறும் குற்றங்களை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்த அந்த ஐ.நா. பேரவையால் முடியும்.

மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருப்பது அந்த நாட்டு உள்நாட்டு விவகாரம் அதனை அரசியல்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவும் சீனாவும் கூறி வருகின்றன. 

எனினும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் ஐ.நா.வும் அந்த நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.