(செ.தேன்மொழி)

மின்னேரியா மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி சிறுமியொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரண - பொலன்னறுவை பிரதான வீதியில் பொலன்னறுவை நோக்கிச்சென்ற லொறி, பாதையை கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  

இதன்போது படுகாமடைந்த சிறுமி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கிரிந்தளை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மாகொல - கிரிபத்கொட வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடந்துச்செல்ல முற்பட்ட பெண்ணொருவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன்போது படுகாமடைந்த பெண் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கந்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் காயமடைந்துள்ளதுடன், அவர் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்புகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.