(எம்.மனோசித்ரா)

இராணுவ சீருடைகளுடன் இருக்கும் சிலருக்கும் வேறு சில நபர்களுக்குமிடையில் முரண்பாடுகள் இடம்பெறுவதைப்போன்று சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஒழுக்கமற்று செயற்படுகின்ற இராணுவத்தினருக்கு எதிராக கடுமையாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ,

இராணுவ சீருடைகளுடன் உள்ள சிலருக்கும் வேறு சில நபர்களுக்குமிடையில் முரண்பாடுகள் இடம்பெறுவதைப் போன்று சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகிறது.

இந்த காணொளி மற்றும் சம்பவம் தொடர்பில் இராணுவம் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

ஒழுக்கமான இராணுவத்திலுள்ள இராணுவ அதிகாரிகள் அல்லது சிப்பாய்களால் ஒழுக்கமற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது. இவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த காணொயில் காணப்படுகின்றதைப்போல இரு தரப்பினருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.