அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஐந்து நாட்களில் பார்வையாளர்கள் இல்லாமல் தொடரும் என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பெப்ரவரி 13 சனிக்கிழமை முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அவுஸ்திரேலிய ஓபனில் ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ள அமைப்பாளர்கள் குறித்த கால கட்டத்துக்கான நுழைவுச் சீட்டு வைத்திருப்போருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

விக்டோரியா மாநிலம் வெள்ளிக்கிழமை முதல் ஒரு விரைவான முடக்கலின் கீழ் வைக்கப்பட்ட பின்னர், அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்னில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலுடன் தொடர்புடைய கொரோனா கொத்தணிப் பரவலில் 13 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

அந்த பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே விக்டோரிய மாநில அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.