(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

அதிலுள்ள விடயங்களை அறிந்து கொள்வதற்கான உரிமை சகலருக்கும் உண்டு. இந்த அறிக்கை ஜனாதிபதியால் தொடர்ந்தும் மறைக்கப்படுமானால் அது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ராஜகிரியவிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் 11 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

அதிலுள்ள விடயங்களை அறிந்து கொள்வதற்கான உரிமை சகலருக்கும் உள்ளது. கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்திலும் இதனை வழியுறுத்தினோம். இது மாத்திரமின்றி அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறது. இதில் ஒரு இலட்சத்துக்கும் அதிக பக்கங்கள் காணப்படுவதால் அச்சிடுவதற்கு சிரமம் எனில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களிலாவது பதிவேற்ற முடியும்.

இதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாவிட்டால் இதனை அரசாங்கம் மறைக்கின்றதா எந்த சந்தேகம் எழும். இதனை மறைத்து வைப்பதற்கான உரிமை ஜனாதிபதிக்கோ அரசாங்கத்திற்கோ இல்லை.

உண்மையான அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்படக் கூடிய அபாயம் தற்போது காணப்படுகிறது. எனவே குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் போது அதனை ஆவண பாதுகாப்பு சபைக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை ஒரு சட்டமாக உருவாக்கினாலும் அது வரவேற்கத்தக்க விடயமாகும்.          

கொரோனா சடலங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய விடயம் பொதுஜன பெரமுனவினரைத் தவிர ஏனைய அனைவருக்கும் ஒரே அர்தத்திலேயே புரிந்துள்ளது.

பொதுஜன பெரமுனவினருக்கு மாத்திரம் அதன் அர்த்தம் வேறொன்றான புரிகிறது என்றால் அவர்கள் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும்.

அத்தோடு பிரதமராயினும் தீர்மானமொன்றை எடுப்பதில் எவ்வகையான சிக்கல் காணப்படுகிறது , அவருக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றார்.