(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் அனுமதியை விரைவில் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ஆளுங்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

Image result for காதர் மஸ்தான்  virakesari

பாராளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சின் கீழ் இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக பிரதமர் சபையில் அறிவித்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது நாடு பல் இன மக்கள் வாழும் நாடு. அதனால் அனைத்து இன மக்களதும் அவர்களது உரிமைகளை பெற்று வாழும் சூழல் இருக்கவேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் அடிக்கடி தெரிவிப்பதுண்டு. அதனால்  மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவது என்பது முஸ்லிம் சமூகத்தின் முக்கிய விடயமாகும். 

அதனால் கொவிட் தொடர்பான தொழிநுட்ப குழு கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான சட்ட ரீதியிலான அனுமதியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அத்துடன் கொவிட் காரணமாக நாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தினாலும் இறக்குமதி  20 வீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இருந்தபோதும் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுத்து வருகின்றது.

இறக்குமதிக்கான தற்காலிக கட்டுப்பாடு உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவித்திருக்கின்றது. அதேபோன்று எமது இறக்குமதி செலவை கட்டுப்படுத்தி இருக்கின்றது என்றார்.