மலைப்பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கும், மலைவாழ் பழங்குடியினர் சிலருக்கும் சிக்கிள் செல் அனீமியா எனப்படும் அரிய வகை இரத்த சோகை நோய் தாக்குகிறது. இதற்கு முழுமையான மருத்துவ தீர்வு என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இதற்கான நிவாரணம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது.

'சிக்கிள் செல்' எனும் நோய், மரபணுக்கள் மூலமாக முன்னோர்களிடமிருந்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்தப்படுகிற ஒரு மரபணு நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சினை இருக்கும். அதாவது, உடல் முழுவதும் ஓக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். சாதாரண மனிதர்களின் உடலில் இருக்கும் சிவப்பு அணுக்கள் 60 நாட்கள் வரை ஆரோக்கியமாக இருக்கும் என்றால், சிக்கிள் செல் பாதிப்பு உள்ளவர்களுக்கு 16 முதல் 20 நாட்கள்வரைதான் இரத்த சிவப்பணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பின் அழிந்துவிடும். அத்துடன் இந்தச் சிக்கிள் செல்களும் ஏனைய சிவப்பணுக்களைப் போல் முழுமையான வட்ட வடிவத்தைப் பெற்றிருக்காது. தேய் பிறை நிலா போலிருக்கும் அத்துடன் அறுவடையின்போது பயன்படுத்தப்படுகிற அரிவாளுக்கு ஆங்கிலத்தில் சிக்கிள் (sickle) என்று பெயர். அதனால் இந்த நோய்க்கு இப்பெயரை குறிப்பிட்டிருக்கிறார்கள் மருத்துவத்துறையினர். 

முழுமைப் பெறாத இத்தகைய அரைவட்ட வடிவத்தைப் பெற்றிருப்பதால், இவைகள் ஒக்சிஜனை எடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் இரத்தக் குழாய்களில் அடைப்புகளையும் இவை ஏற்படுத்துகின்றன. இதனால் கை, கால்கள், முதுகு, கழுத்து, நெஞ்சு என உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பலவிதமான தொற்று நோய்களும் ஏற்படலாம். இந்த நோய் முறையாகக் கவனிக்கப்படாதபோது, அகால மரணம்கூட நேரிட வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறார்காள் மருத்துவர்கள். 

உலகம் முழுக்கவே இந்த நோய் அடையாளம் காணப்பட்டாலும் குறிப்பாக மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்களிடம் இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பழங்குடியினர்கள் இத்தகைய பாதிப்புகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதாரண இரத்த பரிசோதனையின் போது இத்தகைய செல்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியலாம். அதன் பின் எலக்ட்ரோபோரசிஸ் என்ற முறையைப் பயன்படுத்தி பரிசோதனயை மேற்கொள்ளும் போது சிக்கிள் செல் அனீமியாவால் எந்த பிரிவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள இயலும். 

இத்தகைய நோயாளிகள், அதிக எடை கொண்ட பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான பணிகளைச் செய்யக் கூடாது. அதனால் அவர்களுக்கு நீர் இழப்பு (டீஹைட்ரேட்) ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, அதிக அளவு நீர் அருந்த வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பது, மழையில் நனைவது, குளிர் பிரதேசங்களில் வசிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இரத்தப் பரிசோதனை செய்து, ஹீமோகுளோபின் அளவை தெரிந்துகொள்ள வேண்டும். எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் ஆய்வுகள் நடைபெற்றுவந்தாலும், இந்த நோய்க்கு நிரந்தரமான தீர்வு இப்போதைக்கு எதுவும் இல்லை. அதனால், இந்த நோய்க்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மருந்துகளை முறைப்படி உட்கொண்டுவர வேண்டும். முக்கியமாக இந்த நோய் தொற்று நோய் அல்ல என்பதையும் குறிப்பிடவேண்டும். மிகவும் அதிகமான இரத்த இழப்பு ஏற்பட்டவர்களுக்கு இரத்தம் செலுத்துதல் மற்றும் போலிக் அமிலங்களை வழங்குதல் ஆகியவை உடனடி நிவாரணமாக மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதும் இதற்கான சரியான நிவாரணம் ஆகும்.

டொக்டர் நந்தகுமார் M.D.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்