(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரம் கம்பனிகளின் பிடிவாதத்தினாலேயே சம்பள நிர்ணயசபை வரை சென்றது. இதற்கான பொறுப்பை கம்பனிகளே ஏற்க வேண்டும். மாறாக தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைப்பதற்கு முயற்சித்தால் அதற்கு எதிராக போராட தயாராக இருப்பதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளிலும் நாம் கலந்து கொண்டுள்ளதோடு, 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். எனினும் கம்பனிகள் அதற்கு இணக்கம் தெரிவிக்காததன் காரணமாகவே இவ்விடயம் சம்பள நிர்ணயசபைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கான  முழு பொறுப்பையும் கம்பனிகளே ஏற்க வேண்டும். அதனைவிடுத்து தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக போராட நாம் தயாராகவுள்ளோம்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதியினதும் பிரதமரதும் அழுத்தங்கள் அத்தியாவசியமானவையாகும் என்றார்.