(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் -19 வைரஸ் பரவலினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை  நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்த போதிலும், இது குறித்து ஆராயும் தொழிநுட்ப குழுவின் முடிவுக்கு அமையவே இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என தொற்றுநோய் தடுப்பு இராஜாங்க அமைச்சரும் கொவிட் -19 கட்டுப்பாட்டு விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சருமான  சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே சபையில் தெரிவித்தார். இந்த விடயங்களில் எவரதும் தனிப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

 இதற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம், பிரதமரின் தீர்மானத்தை தடுக்கும் சக்தி எதுவென கேள்வி எழுப்பியதுடன் இந்த விவகாரம் ஜெனிவா வரை கொண்டு செல்லப்பட்டுள்ளதை மறந்துவிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பி முஸ்லிம் ஜனாஸா விவகாரம் குறித்து கேள்வி ஒன்றினை முன்வைத்தார். இதன்போது முஜிபூர் ரஹ்மான் எம்.பி கூறுகையில் :- முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பிரதமர் நேற்று காலை சபையில் வாக்குறுதியொன்றை கொடுத்தார். எனவே இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே:- சுகாதார விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு தீர்மானங்கள் எடுக்கும் போது  தனிப்பட்ட முடிவுகளை கொண்டு தீர்மானிக்க முடியாது. இது குறித்த தீர்மானங்கள் தொழிநுட்ப குழுவின் மூலமாகவே முன்னெடுக்கப்படும். எனவே இந்த யோசனையை தொழிநுட்ப குழுவிடம் முன்வைப்போம். அவர்களின் இணக்கப்பாடு இருப்பின் அதற்கமையவே நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதன்போது  ரவூப் ஹகீம் தெரிவிக்கையில்,  பிரதமர் நேற்று சபையில் உறுதியான அறிவிப்பொன்றை விடுத்தார். நல்லடக்கத்திற்கு அனுமதி வழங்குவதாக கூறினார். அனுபவமுள்ள ஒரு அரசியல்வாதியால் முழுமையான பதிலொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து எமக்கு நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கே இந்த பிரச்சினை கொண்டுசெல்லப்படுகின்றது. தொழிநுட்ப குழுவிடம் மீண்டும் இந்த பிரச்சினையை கொண்டு சேர்த்துவிட்டீர்கள். எனவே இந்த பிரச்சினையை தீர்க்க முடியாத நிலைமைக்கு சிறுபான்மை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் சகல முஸ்லிம்களும் இந்த விடயத்தில் திருப்தியான நிலையொன்றை கண்டோம் என்பது சபையில் உள்ள அமைச்சர் அலி சப்ரிக்கும் தெரியும்.

பிரதமர் நேற்று சபையில் மிகத்தெளிவாக நல்லடக்கத்திற்கு இடமளிப்போம் என்றார். வாக்குறுதிகளை வழங்குவதில் பிரதமரை விடவும் சிறந்த நபர் யார்? முடிவுகளை எடுப்பதில் பிரதமரை மிஞ்சிய நபர் யார் உள்ளார்? இந்த விடயம் இப்போதே ஜெனிவா வரையில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும் என நாம் விரும்பவில்லை. எனவே இந்த விடயத்தில் இனியும் இழுத்தடிக்காது தீர்வு ஒன்றினை வழங்க வேண்டும். அதேபோல் பிரதமரை அவமதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.