(இராஜதுரை ஹஷான்)
அமைச்சர் விமல் வீரவன்ச சாதாரணமாக கூறிய விடயத்தை சிலர் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் முரண்பாட்டை தோற்றுவிக்க  முயற்சிக்கிறார்கள். இவ்விடயம் குறித்து பிரதமருடன் பேச தீர்மானித்துள்ளோம். கூட்டணியை பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஒரு உயரிய பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச சாதாரணமாக கூறிய விடயத்தை ஒரு தரப்பினர் பெரிதுபடுத்தி கூட்டணிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினை தோற்றுவிக்க முன்னின்று செயற்பட்டவர்களை விமர்சிப்பதற்கு இடமளிக்க முடியாது. இவ்விடயம் குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் பல கட்சிகள், சிவில் அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றனர். அனைவரது கருத்துக்கும் யோசனைக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கூட்டணி என்ற நிலையில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் காணப்படலாம். ஆகவே கூட்டணியை பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.