(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் பல இம்முறை அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும்.

உள்ளக பிரச்சினைக்கு சர்வதேச அரங்கில் ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

Image result for விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

 

கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது :

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இதுவரையில் குற்றச்சாட்டுக்கள் எவையும் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை விவகாரத்தில் ஒருதலைபட்சமாகவே செயற்படுகிறார். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அடிப்படை கொள்கைக்கு முரணானது. 

இறுதிக்கட்டயுத்ததில் மனித உரிமை மீறள்கள் இடம்பெறவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இதுவரை கவனம் செலுத்தவில்லை.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரம் கவனம் அதிக அக்கறை காட்டப்படுகிறது. இது பொருத்தமற்றதாகும்.

சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் தமிழ்தேசிய தரப்பினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை ஒன்றினைத்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது . இம்முறை இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் பலம் கொண்ட நாடுகள் செயற்படும்.

பொதுஜன பெரமுன  பல கட்சிகளை உள்ளடக்கி கூட்டணியமைத்துள்ளது. கூட்டணி என்ற ரீதியில் கருத்து முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் காணப்படும்.

இது இயல்பானதொன்றாகும். அமைச்சர் விமல் வீரவன்ச கூறிய கருத்துக்கள் தற்போது பல வகையில் பேசப்படுகிறது. காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டணிக்குள்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சிறந்ததாகும்.

ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை எக்காரணிகளாலும் பலவீனப்படுத்த முடியாது. பல கருத்து வேறுப்பாடுகள் காணப்படலாம். ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் இணைந்து செயற்படுவோம்.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் முரண்பாடற்ற அரசாங்கமாக செயற்படுவது கட்டாயமாகும் என்றார்.