(இராஜதுரை ஹஷான்)

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை ஒன்றிணைத்து பொத்துவில் முதல்  பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியின் உண்மை நோக்கத்தை  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறைத்து 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் பாராளுமன்றிரல் ஏதோ அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

இச்செயற்பாடு பேரணியில் ஈடுபட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

Image result for கஜேந்திரகுமார்  virakesari

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வெறும் 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதா என்பது குறித்து வடக்கிழக்கு தமிழ் சமூக சம்மேளனம் விசாரணை நடத்தி தகுந்த பதிலை கூற வேண்டும்.

நேரத்திற்கேற்றாற் போல் செயற்படும் கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் எழுச்சி பேரணி முன்னெடுக்கப்பட்டது

பேரணியை தடுக்க அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு போராட்டம்  வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. போராட்டத்தில் தமிழ்- முஸ்லிம் என இலட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

எழுச்சி பேரணியின் அடிப்படை கொள்கையினை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மூடி மறைத்து வெறும் 10 அம்ச கோரிக்கைகளை ஏதோ அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில் முன்வைத்துள்ளார்.

பேரணியின் முக்கியமான கொள்கை குறித்து அவர் குறிப்பிடவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் தீர்வை பெறுவதற்கான குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்படவில்லை. சர்வதேச நாடுகளின் பார்வை ஈர்க்கப்பட வேண்டும் என்பதேபிரதான நோக்கமாக காணப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற விடயம் முன்வைக்கப்படவில்லை.

அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கு துரோமிழைத்துள்ளார்.

பொத்துவில்- பொலிகண்டி எழுச்சி பேரணி வெறும் 10  அம்ச கோரிக்கைகளை மாத்திரம் உள்ளடக்கியதா , பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இப்பேரணி குறித்து பாராளுமன்றில் ஆற்றிய உரை ஆகியவை தொடர்பில் வடக்கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனம் விசாரணை நடத்தி தகுந்த பதிலை வழங்க வேண்டும்.

தேவைக்கேற்ப செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் விவகாரத்தில் தீர்வை பெறும் போராட்டத்தில் இனி ஒன்றினைய முடியாது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம் பெற்றமனித உரிமை மீறல் குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது.

சர்வதேச நீதிமன்றின் ஊடாகவே தீர்வை பெற முடியும்.அந்த இலக்கை நோக்கி நகர்வதே எமது முயற்சியாகும்.இனப்பிரச்சினைக்கு தீர்வை காண இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணக்கமாக செயற்பட தயார் என்றார்.