அமரர் இர.சிவலிங்கம் அவர்களின் 21 ஆவது ஞாபகார்த்தப் பேருரையும் நூல் வெளியீடும் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பிற்பகல் 3.30மணிக்கு இடம்பெறவுள்ளது.

திரு.பெ.இராதாகிருஷ்ணன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வுக்கு அமரர்.இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழுத் தலைவர் திரு.எம்.வாமதேவன் தலைமை வகிக்கவுள்ளார்.

இந்நிகழ்வின் நினைவுப்பேருரையாக “கொவிட்-19 : மலையக சமுதாயத்தின் மீதான சமூக பொருளாதார விளைவுகள்” எனும் தலைப்பில்  இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளியாளர் திரு.எம்.கேசவராஜ் அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.

மேலும் குழுத்தலைவர் எம்.வாமதேவன் எழுதிய “குன்றிலிருந்து கோட்டைக்கு” எனும் நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளதுடன் இதற்கான வெளியீட்டுரையை மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் தெளிவத்தை எஸ்.ஜோசப் அவர்கள் வழங்கவுள்ளார்.

சிறப்பு பிரதிகளுக்கான கருத்துரைகளை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் திரு.வி.சிவஞானசோதி, எழுத்தாளர் திரு.எம்.திலகராஜ், சமூக ஆய்வாளர் திருமதி. மாதவகலா ஸ்ரீதரன் மற்றும் தேசிய கல்வி நிறுவன உதவி விரிவுரையாளர் திருமதி. தாஹிர் நூருல் இஸ்ரா ஆகியோர் வழங்கவுள்ளனர்.

தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரையும் ஞாபகார்த்தக்குழு உறுப்பினர் திரு.ராஜ்.சிவராமனின் நன்றியுரையும் இடம்பெற்று நிகழ்வு நிறைவு பெறும்.

இந்நிகழ்வுக்கு இலங்கையின் முதற்தர தமிழ் நாளிதழ் வீரகேசரி ஊடக அனுசரணையாளராக இணைந்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.