(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஆயிரம் ரூபா சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியிடும் போது தொழிலாளர்களின் அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கியதாகவும் வேலைநாட்கள் குறிக்கப்படாத வகையிலுமே வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்தார்.’

அவர் மேலும் கூறுகையில், ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் அதன் தார்ப்பரியமும் தெரியாது, அனுபவமும் இல்லாது பலர் சபையில் கூவிக்கொண்டுள்ளனர். ஆனால் ஆயிரம் ரூபாவிற்கான பிரச்சினை என்ன, கூட்டு ஒப்பந்தம் என்றால் என்ன, இதன் துன்பங்கள் என்ன என்பதை அணுவணுவாக அனுபவித்தவன் நான். ஆயிரம் ரூபா தருவோம் என தொழிற்சங்கங்கள் கூறவில்லை, தொழிலாளர்களும் கேட்கவில்லை. இது ஜனாதிபதி தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும், ஜனவரி மாதத்தில் இருந்து ஆயிரம் ரூபாவை தருவதாகவும் வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டது. ஆனால் வரவு செலவு திட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஆயிரம் ரூபாவை கொடுக்க முடியாது என பெருந்தோட்ட கம்பனிகள் மறுத்தன.

ஆனால் ஆயிரம் ரூபா வழங்கும் போதும் வேலைநாட்கள் குறைக்கப்படாது, தொழிலாளர் வஞ்சிக்கப்படாது, வருடத்திற்கு முன்னூறு நாட்கள் வேலை, ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலை, மற்றும் அவர்களின் வரப்பிரசாதங்கள் அனைத்தையும் கொடுத்து ஆயிரம் ரூபா சம்பளத்தையும் கொடுக்குமாறே கேட்டுக்கொள்கிறோம். ஆகவே தொழில் அமைச்சரிடம் கௌரவமாக கேட்டுக்கொள்வது ஒன்றுதான், ஆயிரம் ரூபா சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியிடும் போது தொழிலாளர்களின் அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கியதாக வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் என்றார்.