(செ.தேன்மொழி)

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக ஒழுங்கு செய்யப்படும் விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு விருந்துபசாரங்கள் மற்றும் கொண்டாட்ட நிகழவுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வைரஸ் பரவலுக்கு மத்தியில் விருந்துபசாரங்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவது என்றால் சுகாதார பிரிவினரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாமல் ஒழுங்கு செய்யப்படும் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதுடன், இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்தவர்கள் மற்றும் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது இணையவழி ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதனால் காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர் மற்றும் யுவதிகளை இலக்குவைத்து பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் கவனத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் கூறினார்.