(எம்.மனோசித்ரா)

ஊடகங்களை அடக்குவதோ கட்டுப்படுத்துவதோ அரசின் கொள்கையல்ல. அண்மைக்காலமாக ஊடகங்களைப்பற்றி சமூகத்தில் மோசமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் ஊடகங்கள் உயர்ந்த மதிப்பிற்குரியவையாகும். அந்த மதிப்பினை ஸ்திரமாக பேணுவதற்காகவே இலங்கை பத்திரிகை பேரவை சட்ட திருத்தத்திற்கான முன்மொழிவுகள் சகலரிடமும் கோரப்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.

இதன் போது ' இலங்கை பத்திரிகை பேரவை சட்ட திருத்தத்திற்கான முன்னெடுப்புக்கள் ஊடகங்களை முடக்குவதற்கான செயற்பாடா? ' என்று கேட்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

ஊடகங்களை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்களுக்கே அவ்வாறு தோன்றும். ஊடகங்கள் என்பவை மிக முக்கியமானவையும். அவற்றை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் பத்திரிகைகளை படித்தவுடன் அதுவே மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. எனவே மக்களின் நிலைப்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை பேணுவதற்கும் , பக்கசார்பாக இருக்கக் கூடாது என்பதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவரதும் கருத்துக்களைப் பெற்று பரந்தளவில் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கே நாம் வாய்ப்பினை வழங்கியுள்ளோம். எனவே தான் சகலருக்கும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை செய்வதற்கு பல வருடங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை நிறைவடையவில்லை.

எனவே இதனை சிறந்த வாய்ப்பாகக் கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஊடகங்களைப்பற்றி மோசமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த நிலைமையை இல்லாதொழிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் போலியானவையாகும். ஊடகங்களைப் போன்றே சிவில் பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதும் ஊடக அமைச்சின் கடமையாகும். இவற்றை முறையாக செய்யும் போது ஊடகங்கள் மீதான மதிப்பும் அதிகரிக்கும் என்றார்.