இலங்கையிலிருந்து குழந்தை ஒன்றுடன் சென்ற இஸ்ரேலிய பெண் ஒருவர் இஸ்ரேலின் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டுச் சென்ற குழந்தை தொடர்பில் மர்மம் நீடிப்பதனாலேயே டி.டின்.ஏ. பரிசோதனைக்காக விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

40 வயதுடைய கலிட் நாகாஷ் என்ற குறித்த பெண் வைத்திருக்கும் பெண் குழந்தை உண்மையில் அவருடைய குழந்தையா என்பதை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் டி.என்.ஏ. பரிசோதனையில் முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் குழந்தை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலிட் நாகாஷ் குறித்த குழந்தையை மற்றுமொரு குழந்தையின் கடவுசீட்டை பயன்படுத்தியே கொண்டுச் சென்றுள்ளார். இதனை கண்டறிந்த பின்னரே டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தான் வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு சென்றிருந்த போது இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்ததாகவும், இதனையடுத்து தனது குழந்தைக்காக விண்ணப்பித்த விசாவை அதிகாரிகள் நிராகரித்ததாகவும் கலிட் நாகாஷ் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.