திருகோணமலை  சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்  இன்று (09)  இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில்  இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் இந்திரன் ரஜீதன் என சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

சிறுவன் மலசலம் கழிப்பதற்காகச் சென்ற போது யானைக்கு பாதுகாப்பிற்காக போடப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சிறுவனின் சடலம்  தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார வேலியை யானை பாதுகாப்புக்கு போட்டுவிட்டு அதில் பாயும் மின்சாரத்தை அணைக்காமல் சென்று சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.