(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரை நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 

அதனை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று ஏனைய தனியார் சட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயவேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இன்று சபையில் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் இன்று அத்துரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கபட்ட முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான கருத்துக்கு தங்களது நிலைப்பாட்டை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில்,

தனியார் சட்டங்கள் பல எமது நாட்டில் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில், அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக குழுவொன்று நியமிக்கப்பட்டு, குழுவின் பரிந்துரை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அது தற்போது பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்க ஏற்பாடாகி இருப்பது யாரும் அறிந்தவிடயம். 

அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களுக்கு அநீதி ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதுதொடர்பாக ஆராய்ந்து, நாட்டின் பொதுவான சட்டத்துக்கு சமமாக திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம். 

அதனால் நீதி அமைச்சுக்கு நாங்கள் சமர்ப்பித்திருக்கும் திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவிக்கை எடு்கவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

அதனைதொடர்ந்து எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி, தெரிவிக்கையில்,

முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருக்கும் சில குறைபாடுகளை திருத்தியமைப்பதற்கு கடந்த எமது அரசாங்க காலத்தில் குழுவொன்றை அமைத்து, அதனை மேற்கொண்டிருந்தது. அந்த குழுவின் அறிக்கை தற்போது நீதி அமைச்சருக்கு சமர்ப்பித்திருக்கின்றோம். 

அத்துடன் எமது நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் மாத்திரமல்ல, கண்டிய சட்டம், தேசவளமை சட்டம் என பல இருக்கின்றன. அவற்றிலும் குறைபாடுகள் இருக்கின்றன.  அவை தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

மாறாக முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக மாத்திரம் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்றார்.