இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.

இன்று (09) காலை 10 மணி முதல் அமர்வுகள் ஆரம்பமாகிய பின்னர் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை விவாதம் இடம்பெறும். பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறும் என செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

 

பெப்ரவரி 10 

பெப்ரவரி 10 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணி முதல் 10.30 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பிரதமர் பதில் வழங்குவார். 

அதன் பின்னர் முற்பகல் 10.30 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விநேரம் வழங்கப்படும்.

அன்றைய தினம் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதுடன், இவ்விவாதம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறும். அதன் பின்னர் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரரணை மீதான விவாதம் இடம்பெறும்.

 

பெப்ரவரி 11 

பெப்ரவரி 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். 

அன்றையதினம் காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விக்கு நேரம் ஒதுக்கப்படவிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

 

பெப்ரவரி 12 

பெப்ரவரி 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்கனி எல்லாவல,  கே.பி.சில்வா மற்றும் கபில அபேரத்ன ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். அன்றையதினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.

 

பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்பில் உறுப்பினர்களுக்கு அழைப்பு

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (09) காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படவிருக்கும் எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப் பகுதியிலும், அமர்வுகள் இடம்பெறாத காலப் பகுதியிலும் வாராத்துக்கு ஒரு தடவை இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2021 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் இறுதியாக 2021-01-25 ஆம் திகதி 190 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.