இலங்கையின் துரும்புச் சீட்டு ‘ஆப்பாக’ மாறுகிறதா?

Published By: Gayathri

08 Feb, 2021 | 02:45 PM
image

- சி.அ.யோதிலிங்கம்

“தமிழ் மக்களின் இருப்பே கிழக்கு முனையத்தில் தான் தங்கியுள்ள நிலையில் அதுபற்றி கவலைகொள்ளாது தமிழ்த் தரப்புக்கள் இருக்கின்றமை துரதிஷ்டவசமானது”

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய நெருக்கடி இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கோட்டாபய அரசிற்கும் பெருந்தேசியவாதத்திற்கும் இடையிலான போர் தற்போது பெருந்தேசியவாதத்திற்கும் இந்திய தேசிய அக்கறைக்குமிடையிலான போராக பரிணாமமடைந்துள்ளது. 

இரண்டு தரப்புமே சிறிய விட்டுக்கொடுப்புக்கும் தயாராகவில்லை.  இந்தியா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முறையாக அமுல்படுத்தும்படி கோரியுள்ளது.

முன்னர் ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தபோதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அது துறைமுக அதிகாரசபையின் முழுப்பொறுப்பில் இருக்கும் எந்த வெளிநாட்டிற்கும் வழங்கப்படமாட்டாது எனக் கூறியிருக்கின்றார். 

நல்லாட்சி அரசாங்கம் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் பங்கு விகிதாசாரம் பற்றி எதுவும் கூறவில்லை. பங்கு விகிதாசாரம் துறைமுக அதிகார சபைக்கு 51 சதவீதம் என்றும், இந்தியாவுக்கு 49 சதவீதம் என்றும் தெளிவாக வரையறுத்தது கோட்டாபய அரசாங்கம்தான்.

உண்மையில் கோட்டாபய அரசாங்கம் கிழக்கு முனையத்தை துரும்புச் சீட்டாக முன்வைத்து ஜெனிவாவில் பாதுகாப்பு அரணைத்தேட முற்பட்டது. அதற்கு அரசே வளர்த்தெடுத்த பெருந்தேசிய வாதம் தற்போது ஆப்பு வைக்கிறது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்” என்ற நிலைமையே கோட்டாபய அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. 

தற்போது கிழக்கு முனையத்திற்கு மாற்றாக மேற்கு முனையத்தில் 85 சதவீதத்தினை இந்தியாவுக்கு தரலாம் எனக் கூறியபோதும் பெருந்தேசிய வாதம் அதையும் ஏற்கவில்லை. இந்தியாவும் அதற்கு பச்சை கொடிகாட்டவில்லை. தம்முடன் இலங்கை அரசு எதனையுமே பேசவில்லை என்றுதான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விவகாரத்தில் கோட்டாபய அரசு,  இந்தியா, அமெரிக்கா தலமையிலான மேற்குலகம், சீனா, பெருந்தேசிய வாதம் என்பன தத்தம் நலன்களிலிருந்தே நகர முற்படுகின்றன. அனைத்து தரப்பினரின் நலன்களுக்கான பொதுப்புள்ளி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஒவ்வொரு தரப்பும் தத்தமது நலன்களில் விடாப்பிடியாக இருப்பதால் பொதுப்புள்ளியை கண்டுபிடிப்பதும் இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஏனெனில் இந்த நலன்கள் என்பவை அந்தந்த தரப்புக்களின் இருதரப்புகளுடன் தொடர்பு பட்டதாக இருக்கின்றன. இதனால் அனைத்து தரப்பிற்குமே “கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலைதான் உள்ளது.

கோட்டாபய அரசாங்கம் கிழக்கு முனைய  விடயத்தில் தனது வழமையான வெளிவிவகாரக் கொள்கையையே பின்பற்றப் பார்க்கிறது. அதாவது, நிலைமைகளை அப்போதைக்கு சரிசெய்யும் நிலையற்ற கொள்கையையே பின்பற்றப் பார்க்கின்றது. 

ராஜபக்ஷக்களுக்கு இந்தியாவுடன் காணப்படும் உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அழுத்தம் உச்சமாக இருக்கும்போது, பணிந்துபோவது; பின்னர்  தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுவது; சந்தர்ப்பம் கிடைத்தால் எதையாவது சாட்டாக வைத்து அதனை இரத்துச் செய்வது; இதுவே பொதுப்படையான மரபாக உள்ளது.

இதற்கான அனுபவத்தை தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களிலிருந்தே இந்திய அரசு கற்றுக் கொண்டிருக்கலாம். 

தமிழ் மக்களின் விவகாரத்தைப் பொறுத்தவரை அழுத்தங்கள் உச்சமாக வரும்போது தமிழர் நலன்களை எழுத்தில் வழங்குவது, பின்னர் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுவது, எழுத்தில் வழங்கியவற்றை மீறுவது, சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரத்துச் செய்வது அல்லது கிழித்தெறிவது என்கின்ற அணுகுமுறையையே காலம் காலமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் பின்பற்றி வருகின்றனர். 

சோல்பரி  யாப்பின்  29ஆவது பிரிவு தொடக்கம் தமிழ் மொழி அரசகரும மொழியாக பயன்படுத்தல் வடக்கு – கிழக்கு பிரிப்பு வரை அவ்விதமாகவே இலங்கையின் ஆட்சியாளர்கள் நடந்துகொண்டிருக்கின்றாகள். 

சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவு ஒரு இனத்திற்கோ,  மதத்திற்கோ, சமூகத்திற்கோ வழங்காத சலுகைகளை இன்னோர் இனத்திற்கோ சமூகத்திற்கோ வழங்கக்கூடாது எனக் கூறியிருந்தது.

 

இதன் சாராம்சம் ஒரு இனத்தையோ, மதத்தையோ, சமூகத்தையோ பாதிக்கக்கூடிய சட்ட நிர்வாக, நீதி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்பது தான். ஆனால், சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த வருடமே (1948இல்) அது மீறப்பட்டது.

 

மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் பிரஜாவுரிமைச்சட்டம் அவ்வாண்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்திய, பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் (1949) தேர்தல்கள் திருத்தச் சட்டம் (1949), தனிச்சிங்களச் சட்டம் (1956), சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் (1967) என்பன நிறைவேற்றப்பட்டு சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவே கேலிக்குள்ளாக்கப்பட்டது. 

இறுதியில் 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு 29ஆவது பிரிவையே இல்லாமல் செய்தது. அதேபோன்றுதான் தமிழ் மொழி அரச கரும மொழி என்ற விடயத்திலும் சரி  வடக்கு – கிழக்கு இணைப்பும் பின்னர் அதனை நீதிமன்றத்தின் ஊடாக பிரிப்பது வரையில் நடைபெற்ற விடயங்கள் எம் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.

பெருந்தேசியவாதமானது மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவற்றிலேயே கட்டியெழுப்பப்பட்டது. தற்போது தமிழின எதிர்ப்பு சிங்களவரல்லாத ஏனைய இனங்களுக்கு எதிரான எதிர்ப்பு என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கள சமூக உருவாக்கம் பெருந்தேசியவாத கருத்துநிலைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதால் இலங்கை அரச உருவாக்கத்திலும் பெருந்தேசியவாதமே அடிப்படையாக உள்ளது. 

அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் கருவியாகவே அரசாங்கம் இருப்பதனால் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் பெருந்தேசியவாதமே அதன் அடித்தள ஆதாரமாக இருக்கும். 

இந்த விடயத்தில் பிரதான அரசியல் தரப்புக்களாக காண்பிக்கும் நீல அணிக்கும், பச்சை அணிக்கும் அளவு வேறுபாடுகள் மட்டும் இருக்கலாம். பச்சை அணி லிபரல் தளத்தினதும், பெருந்தேசியவாதத் தளத்தினதும் கூட்டாக இருப்பதால் ‘பச்சைப்’ பெருந்தேசியவாதத்தினை அதனால் பின்பற்ற முடியாது. அது வடிகட்டிய பெருந்தேசியவாதத்தையே பின்பற்றும். சுருக்கமாககூறினால் அதனை லிபரல் முலாம் பூசப்பட்ட பெருந்தேசியவாதம் எனலாம். 

ஆனால், நீல அணியின் நிலைமை அவ்வாறானது அல்ல. அதுபெருந்தேசியவாதத்தளத்தை மட்டுமே கொண்டிருப்பதால் அது ‘பச்சையாகவே’ பெருந்தேசிய வாதத்தைக் கக்கும். இரட்டை வேடம் என்பது அங்கு இல்லை. இந்த நீல அணி தற்போது ‘கடுஞ் சிவப்பு’ அணியாக உருவெடுத்திருகின்றமை மட்டுமே மாற்றம். மற்றையபடி நிலைப்பாடும் செயற்பாடும் ஒன்றாகத்தான் உள்ளது.

இவ்வாறான நிலையில், அரசாங்க நிறுவனங்கள் அரசின் அங்கங்களாகும். இதனால் அவை அனைத்தும் பெருந்தேசிய வாதத்தின் நலன்களையே பிரதிபலிக்கும். நீதித்துறைகூட அதற்கு விதிவிலக்காக இருக்காது. பெருந்தேசியவாத நலன்களுக்காக நீதிமன்றத் தீர்ப்புக்கள் மீறப்பட்டால் நீதித்துறை மௌனமாகவே இருக்கும். 

தொல்பொருள் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், வனவளத்திணைக்களம்,  வனஜீவராசிகள் திணைக்களம் அனைத்துமே பெருந்தேசிவாத நிறுவனங்கள் தான். அவற்றிடம் இருந்து ஒதுக்கப்பட்ட தரப்புக்கள் ஒருபோதும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே விவகாரங்களை கொண்டு செல்வதன் மூலம்தான் ஒடுக்கப்படும் தரப்புக்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தொடர்பாக பின்பற்றிய மேற்கூறிய அணுகு முறைகளையே இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் நலன்களுக்காக முழு இலங்கைத்தீவுமே தேவை. அதனால் இலங்கைக்கு ஓர் எல்லை வரை விட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு அது தயாராகவே இருக்கும். இந்தியாவின் இந்த விட்டுக்கொடுக்கும் பலவீனத்தை இலங்கை நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. இந்தப் பலவீனத்தை நன்கு தெரிந்த படியால் இந்தியாவின் பொறுமை எல்லைவரை இலங்கை செல்கிறது. இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுகிறது. 

எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டவுடன் இலங்கை  சாஸ்டாங்கமாக இந்தியாவின் காலில் விழுந்துவிடும். அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கான உத்தரவாதங்களை எழுத்தில் வழங்கும். எனினும், பின்னாளில் நிலைமகள் சுமூகமடைந்தவுடன் இலங்கை அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடும். இலங்கை, இந்திய ஒப்பந்தம் தொடக்கம் சம்பூர் அனல் மின் நிலையம், பலாலி விமான நிலையம் வரை இந்த நிலைமையே நீடிக்கின்றது.

இந்தியா, இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் வகையில் செயற்பட்டு 1987ஆம் ஆண்டு 25 தொன் உணவுப் பொதியினை யாழ்ப்பாணத்தில் போட்டது. உடனே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியின் காலில் விழுந்தார். அதன் விளைவாகத்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. 

அந்த சர்வதேச ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் இலங்கை பெரிதாக அக்கறை காட்டவில்லை. இந்தியாவின் கண்ணுக்கு முன்னாலேயே தேசிய கொள்கை வகுப்பு என்ற பெயரிலும், பாராளுமன்ற சட்டவாக்க உரிமை என்ற பெயரிலும், மாகாணசபையின் அதிகாரங்களை பறித்த போதும், வடக்கு-கிழக்கு இணைப்பை இரத்துச் செய்தபோதும்  இந்தியா வேடிக்கையே பார்த்தது. முறையான அழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை.

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு சமிக்ஞை கொடுத்த இலங்கை அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இறுதியில் தமிழ்த்தரப்பு எதிர்க்கின்றது எனக்கூறி அதனை இரத்துச் செய்தது. 

பலாலி விமான நிலையத்தை இந்தியா புனரமைப்புச் செய்ததே தனது தேசிய பாதுகாப்பிற்காகத்தான். தற்போது கொரோனாவை பயன்படுத்தி பாலாலி விமான நிலையத் தளபாடங்கள் மத்தள விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று சீனாவின் உள்நுழைவு இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு முரணானது. இவை ஒப்பந்த பின் இணைப்பில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த விடயத்தில்கூட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இந்தியா கேள்விகளைக் தொடுப்பதற்கு தயாரில்லாமல் இருக்கின்றது. 

பெருந்தேசியவாதம் இந்திய எதிர்ப்பில் கட்டப்பட்டுள்ளதே தவிர, சீன எதிர்ப்பில் கட்டப்படவில்லை. மாறாக அது சீனச் சார்புநிலையில் கட்டப்பட்டது எனக் கூறலாம். 

இந்தியா-சீனப் போரின்போதுகூட அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க இந்திய சார்புநிலை எடுக்கவில்லை. நடுநிலையே வகித்தார். இரண்டு நாடுகளுக்கிடையே இணக்கத்தைக் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநாட்டையும் நடத்தினர். 

ஆனால், இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய சார்பு நிலையை எடுத்தது. இந்தியாவைப் பாதுகாக்க போராளிகளை அனுப்பப் போவதாகவும் கூறியிருந்தது. கிழக்கு முனையம் தொடர்பாக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் பெருந்தேசியவாதம் சீனாவின் துறைமுக நகர் தொடர்பாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை.

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இந்தியாவிற்கும் அதிகளவான கரிசனை உள்ளது. அதேபோன்று இலங்கைக்கும் அந்த முனையத்தில் அதிகளவு கரிசனையும் தேவையும் உள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் பறிபோன நிலையிலும், கொழும்பு துறைமுக நகரும், தெற்கு முனையமும் சீனாவின் வசமாகியுள்ளநிலையிலும், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்திலாவது தனது இருப்பைப் பேண வேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்கு உண்டு.

 

ஏனென்றால் கொழும்புத்துறைமுகத்தில் இடம்பிடிப்பது என்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாக உள்ளது. ஆகவே, இதில் எந்தவித விட்டுக் கொடுப்பையும் செய்ய இந்தியாவால் முடியாது. ஆரம்பத்தில் இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்த ஜப்பானும் இந்த விடயத்தில் அக்கறை கொண்டிருந்தது. 

ஆனாலும்,  இலகுரயில் திட்டத்தினை முன்னெடுக்கும் விடயத்தில் ஆட்சியாளர்கள் குறித்து ஜப்பான் பெற்றுள்ள அனுபவம் தற்போது வெறுமனே ‘கவலை’ என்ற வார்த்தைக்குள் அதனைக் கட்டிப் போட்டுவிட்டது.

தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் ஜெனிவாவில் தம்மை பிணையெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது. அதற்கான மூக்கணாம் கயிறு இந்தியாவிடம் தான் உள்ளது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டாலும் இலங்கையைக் காப்பாற்ற முடியாது. 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா.கட்டமைப்பில் தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இலங்கையைக் காப்பாற்றினாலும் சர்வதேச நாடுகளில் உள்ள, உள்ளக நீதிமன்றங்களில் விசாரணை, பயணத்தடை, சொத்து முடக்கம் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் சிபார்சு செய்துள்ளார். 

இந்த நெருக்கடிகளிலிருந்து இலங்கையால் தப்ப முடியாது. ஆகவே,  இந்த  விடயத்தில் இந்தியாவின் காலில் விழுவதைத் தவிர வேறு தெரிவு இலங்கைக்கு இல்லை.

இதற்காக இந்திய - இலங்கை நலன்கள் சந்திக்கும் பொதுப்புள்ளியாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தற்போது காணப்படுகின்றது. அதற்காகவே இலங்கை மேற்கு முனையத்தினை சிபார்சு செய்துள்ளது. இந்த மேற்குமுனைய பொதுப்புள்ளியை இந்தியா ஏற்குமா? என்று தற்போதைக்கு கூற முடியாது. இதனை ஏற்பதில் இந்தியாவிற்கு இரண்டு பிரச்சினைகள் உண்டு.

முதலாவது இந்தியாவுக்கு இதுவொரு சுய மரியாதைப் பிரச்சினை. ஏனென்றால் பெருந்தேசிய வாதத்திற்கும், சீனாவின் வியூகங்களுக்கும் ஒரு பிராந்திய வல்லரசு பணிந்துப்போனது என்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஆபத்துள்ளது. இவ்விதமான நிலைமைகள் இந்திய விம்பத்திற்கு எதிரானது. 

இரண்டாவது, மேற்கு முனையம் கிழக்கு முனையத்தைப் போல முக்கியமானதல்ல. இந்தியாவின் நூற்றுக்கணக்கான கொள்கலன்கள்; கிழக்குமுனையத்திற்கே வருகின்றன. ஆகவே அவ்விதமான ஒரு கட்டமைப்பை விட்டுக்கொடுப்பதை இந்தியா விரும்பாது. 

அதேநேரம் இந்த முனையத்தினை பெற்றுக்கொள்வதன் மூலமே துறைமுக நகரத்தினையும், தெற்கு முனையத்தினையும் மிகவும் துல்லியமாக அவதானிக்க முடியும். ஏனென்றால் இந்த இரண்டு கட்டமைப்புக்களும் சீனா வசம் உள்ளன. ஆகவே, இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருந்தால் கிழக்கு முனையமே சாலப் பொருத்தமானது. 

ஆகவே, கற்பனைத் திட்டமாக உள்ள மேற்கு முனையத்தில் 85 பங்குகளுக்காக கிழக்கு முனையத்தினை இந்தியா இலகுவாக விட்டுக்கொடுத்துவிடும் என்று கருத முடியாது. நிச்சயமாக தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டே இருக்கும். 

அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் இந்தியாவை ஏதோ ஒரு வகையில் இலங்கை  திருப்திப்படுத்திவிட்டால் ஜெனிவாவில் தமிழ் மக்களின் நிலை அந்தோகதிதான். அனைத்து முயற்சிகளையும் இந்தியா கவிழ்த்து இலங்கையை பிணையெடுத்துவிடும். ஆகவே, இந்தியாவை தமிழர்களின் பக்கம் வைத்திருப்பதற்கு தற்போதைக்கு தமிழத் தரப்பிற்கு உதவப்போவது பெருந்தேசியவாதமும், சீனாவும் தான்.

மேலும், இந்தியா கிழக்கு முனைய விடயத்தில் இரண்டு வடிவங்களில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க முனைகின்றது. ஒன்று ஜெனிவா மூலமான அழுத்தம். அது ஏற்கனவே ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மூலம் இலங்கைக்கு வழங்கியாயிற்று. 

இரண்டாவது தமிழ்த்தரப்பினூடாக அழுத்தம். இதற்காக தமிழ்த் தரப்பிலிருந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்த்தரப்பின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்திற்கு இந்திய ஆசீர்வாதம் வலுவாக உண்டு. 

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும் தமிழர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்குபற்றியமையும் மலையக மக்களையும் அதில் உள்ளீர்த்து அவர்கள் பிரச்சினைகளைப்பற்றி கோசங்கள் எழுப்பப் படுவதும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இரட்டை நன்மையே.

மேலும் சீனா கிழக்கு முனைய விவகாரத்தில் தெளிவாகவே நகர்கின்கிறது. துறைமுகம் எல்லைக்குள் இந்தியா கால் பதிக்கக்கூடாது என்பதில் அது மிகக் கவனமாக உள்ளது. சீனாவின் ஒரேபட்டி ஒரேபாதை திட்டத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போலவே கொழும்புத்துறைமுகமும் மிகவும் முக்கியமானது.

அதனால் துறைமுக நகர அபிவிருத்தி திட்டம், தெற்கு முனையம் ஆகியவற்றை ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் தற்போது திரைமறைவில் செயற்பட்டு கிழக்கு முனையத்தினை இந்தியாவிடம் செல்லாது பார்த்துக்கொண்டு தனது காலை வலுவாக ஊன்றியுள்ளது. 

அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குப் பின்னாலேயே நிற்கின்றது. தெற்காசிய விவகாரத்தில் தனித்துச் செயற்பட மேற்குலகம் விரும்பவில்லை. 

இந்தியாவிற்கு பின்னாலேயே ஓடுவதற்கே விரும்புகின்றது. இந்தியா இல்லாவிட்டால் மேற்குலக நலன்களை தெற்காசியாவில் பேணுவதே கடினமாக இருக்கும் நிலைமைதான் உள்ளது. 

எவ்வாறாயினும், கிழக்கு முனைய விவகாரத்தில் துரதிஸ்டம் பிடித்த தரப்பாக இருப்பது தமிழ்த் தரப்புத்தான். தமிழ்த்தரப்பின் இருப்பே கிழக்கு முனையத்தில்தான் தங்கியிருக்கிறது என்கின்றபோதும் தமிழ் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரியளவிற்கு பேசுபொருளாக வரவில்லை. 

இந்தவிடயத்தில் மூலோபாய தந்திரோபாய நகர்வுகள் தமிழ்த்தரப்பிற்கும் தேவை. தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் குடுமிச் சண்டைபிடிப்பதை நிறுத்தி இந்த விவகாரத்திலும் கவனத்தைக் குவிப்பது அவசியம். இந்த விவகாரத்தில் தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி இலங்கையின் துரும்புச் சீட்டு வெற்றிபெறுமா? தோல்வியடையுமா? என்பதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48