(எம்.மனோசித்ரா)

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை(08.02.2021) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை 3,042 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இன்று முதல் பாடசாலை சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகளில் எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இதே போன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

மேல் மாகாணத்திலிருந்து வெளிபிரதேசங்களுக்குச் செல்கின்ற பொது போக்குவரத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. அத்தோடு முகக்கவசம் அணியாதோருக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.