பாராளுமன்ற வளாகத்தில் நாளை (09) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறவிருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் பங்கேற்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் வாரத்துக்கு ஒருதடவை பாராளுமன்றப் பணியாளர்களை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், இந்தப் பரிசோதனைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுப்பதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப் பகுதியிலும், அமர்வுகள் இடம்பெறாத காலப் பகுதியிலும் வாராத்துக்கு ஒரு தடவை இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2021 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் இறுதியாக 2021-01-25 ஆம் திகதி 190 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது.