பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நால்வர் பலியானதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு ஆடைத் தொழிற்சாலைகளும் மறு அறிவித்தல் வரை உடன் மூடப்பட்டுள்ளன. 

கடந்த வருட அக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் இதுவரையில் பதுளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மொத்தமாக 584 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட கொவிட்-19 தடுப்பு செயலணியினர் தெரிவித்துள்ளனர்.

வெலிமடையில் ஒருவர், தியத்தலாவையில் இருவர், மகியங்கனையில் ஒருவர் உள்ளிட்டு நான்கு பேர், கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளனர். அத்தோடு, மகியங்கனைப் பகுதியில் இரு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்விரு ஆடைத் தொழிற்சாலைகளில் சுமார் 185 பேர் வரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளையில் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு,  பசறை, பண்டாரவளை, தியத்தலாவை, ரிதிமாலியத்தை, மகியங்கனை, வெலிமடை போன்ற இடங்களிலேயே கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பதுளை மாவட்ட கொவிட் 19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.

அத்துடன் பதுளை மாவட்டத்தில 617 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருகின்றமையும் குறிப்பிடதக்கது.