-என்.கண்ணன்
“ஒவ்வொரு நாடுகளுக்கும் தனிப்பட்ட நலன்களும், மூலோபாய இலக்குகளும் இருந்தாலும், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கான அச்சுறுத்தல்கள் எழும்போது அவற்றையும் கருத்திற் கொண்டு முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன”
புவிசார் மூலோபாய முக்கியத்துவம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது இப்போது முக்கியமான கேள்வியாக எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்வி எழுவதற்கு, இலங்கை அரசாங்கம் இப்போது கொண்டுள்ள நிலைப்பாடும் ஒரு காரணம்.
நாட்டின் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தை வைத்து சர்வதேச சமூகத்துடன் பேரம் பேசுவதற்கு அல்லது அதனுடன் முரண்டு பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம், தயாராகி வருவதாகவே தெரிகிறது.
அண்மையில், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடைகளை விதிக்கவும், சொத்துக்களை முடக்கவும், ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்துள்ள பரிந்துரைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்குப் பதிலளித்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, ஐ.நா.வில் அவ்வாறான தடைகளுக்கு வாய்ப்பில்லை என்றும், சில நாடுகள் தடைகளை விதிக்கலாம் என்றும் கூறியிருந்தார். அதற்கடுத்து அவர் குறிப்பிட்ட விடயம்தான் முக்கியமானது.
இலங்கை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது என்றும், இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்பும் நாடுகள் அவ்வாறு தடைகளை விதிக்கும் முடிவை எடுக்காது என்றும், அத்தகைய முடிவுகள் அதற்கு சிறந்ததாக அமையாது என்றும் குறிப்பிட்டிருந்தார் அட்மிரல் கொலம்பகே.
அதாவது, இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரங்களையும், பொறுப்புக்கூறல் விவகாரங்களையும், ஒவ்வொரு நாடும் மூலோபாயக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.
அதற்கு அப்பால், மூலோபாயமிக்க இடத்திலுள்ள இலங்கையுடன் நட்புறவை விரும்பினால், இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்க முடியாது என “மிரட்டும் தொனி” யும் அதற்குள் அடங்கியிருந்தது.
இந்தியப் பெருங்கடலில், இலங்கைத்தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது என்பது உண்மை.
இலங்கைக்குள் மூலோபாய அமைவிட முக்கியத்துவம் தான். தமிழர்கள் இதுவரை உரிய நீதியைப் பெற முடியாமல் போனதற்குக் காரணம் என்பதிலும் சந்தேகம் இல்லை.
ஆனால், எல்லா நேரங்களிலும் அதே மூலோபாய முக்கியத்துவம் கைகொடுக்கும் - காப்பாற்றும் என கொழும்பு எண்ணுகிறது.
அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளை இலக்கு வைத்துதான் அட்மிரல் கொலம்பகே மூலோபாய முக்கியத்துவம் பற்றி கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவுக்கு இலங்கை முக்கியத்துவமானதுதான் என்றாலும், தற்போதைய பைடன் நிர்வாகம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வி உள்ளது.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா படைகளை நிறுத்தி வைத்திருந்தமைக்கு காரணம், அந்த நாடுகளின் மூலோபாய முக்கியத்துவம் தான்.
அதனைக் கருத்திற்கொள்ளாமல், அங்கிருந்து தமது படைகளை விலக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவெடுத்தபோது, மூலோபாய முக்கியத்துவம் மட்டும், கருத்திற் கொள்ளப்படவில்லை.
அதுபோலவே, இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை மூலோபாய முக்கியத்துவம் மிக்க நாடு. அதுவும் வடக்கு-கிழக்கு என்பது மிகமிக முக்கியமானது.
அவ்வாறான மூலோபாய முக்கியத்துவம்மிக்க இடத்தில், 1987இல் தனது படைகளை நிறுத்திய இந்தியா, 1990இல் விலக்கிக்கொள்ள இணங்கியது. மூலோபாய முக்கியத்துவத்தை மட்டும் கணக்கிற்கொண்டு இந்தியா முடிவெடுத்திருந்தால், இன்னமும் இந்தியப்படைகள் வடக்கு, கிழக்கில்தான் நிலை கொண்டிருந்திருக்கும்.
ஆக, மூலோபாய முக்கியத்துவம் என்பது சர்வதேச, பிராந்திய அரசியல் சூழல்கள், ஒத்துழைப்புகள், உறவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
மூலோபாய முக்கியத்துவத்தைவிட பாரதூரமான ஒருவிளைவைச் சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்ற போது, எல்லா நாடுகளும், அவற்றுக்கிடையிலான அளவீட்டையில் கையில் எடுத்துக் கொள்ளும்.
இலங்கையில் அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் நலன்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் போக்கும், செயற்பாடுகளும், அமெரிக்கா மற்றும் மேற்குலக நலன்களுக்குச் சாதகமானதாக இல்லை என்பதே உண்மை.
உதாரணத்துக்கு, எம்.சி.சி. உடன்பாட்டை நிராகரித்து, அமெரிக்காவை இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முனைந்த நாடாக, அடையாளப்படுத்தி விட்டது அரசாங்கம்.
இதற்கு மேல் இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை அமெரிக்கா தனது நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்டுவிட்டது. இதற்குப் பின்னரும், அமெரிக்கா இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டே முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதைவிட, ஏற்கனவே இராணுவத் தளபதியின் நியமனத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டதுடன், தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் குறித்தும் முன்னெச்சரிக்கை செய்திருந்தது.
அதுபோல, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து விட்டது. உதாரணத்துக்கு, இலங்கை அரசாங்கத்தின் இறக்குமதித் தடை, ஐரோப்பிய ஒன்றியத்தை பெரிதும் சீற்றமடையச் செய்திருக்கிறது.
ஏற்கனவே இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை அரசுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டன. ஒருவழிப் பாதை வர்த்தகம் நீண்டகாலத்துக்கு வாய்ப்பாக அமையாது என்று அந்த நாடுகள் எச்சரித்திருந்தன.
ஆனால், அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையுடனான வர்த்தக நலன்களை அடையமுடியாத நிலையில், இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அவற்றுக்கு அவசியமற்றது.
அதுபோல இந்தியாவுக்கும், இலங்கை மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இடமாக இருந்தாலும், இந்தியாவினால், கிழக்கு கொள்கலன் முனையத்தைக்கூட பெறமுடியவில்லை.
இதற்கு மேல், இந்த நாடுகள் இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை வைத்து முடிவெடுக்கும் என்று இலகுவாக நம்பிவிட முடியாது.
ஒவ்வொரு நாடுகளுக்கும் தனிப்பட்ட நலன்களும், மூலோபாய இலக்குகளும் இருந்தாலும் ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கான அச்சுறுத்தல்கள் எழும்போது அவற்றையும் கருத்திற் கொண்டு முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம், மூலோபாய முக்கியத்துவத்தை விட ஜனநாயகம், மனித உரிமைகள் விவகாரத்தில் கூடுதல் கரிசனை செலுத்தும் என்பது, கலாநிதி தயான் ஜயதிலக போன்றவர்களின் கணிப்பாக இருக்கிறது என்பதையும் இவ்விடத்தில் கவனத்திற்கொள்ளலாம்.
வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் கொலம்பகேயும் சரி, தற்போதைய அரசாங்கத்தின் கடும் போக்காளர்களும் சரி, இலங்கைத் தீவின் மூலோபாய முக்கியத்துவத்தை நம்பிக்கொண்டு, மிகையான நம்பிக்கைகளை வளர்க்கின்றனர்.
இதனை பகிரங்கமாகவே தமது பலமாக காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றனர். இங்குதான் இலங்கை அரசாங்கம் தவறிழைத்துக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் மூலோபாய முக்கியத்துவம் வெறும் அமைவிடத்துக்கு மாத்திரம் பொருந்தக்கூடியதன்று. அதற்கும் அப்பால், மூலோபாய நலன்கள் ஏனைய வடிவங்களிலும் ஏற்படலாம்.
இந்த சமநிலையில் குழப்பங்கள் உருவாகின்றபோது, எது அதிகம் பெறுமதியானதாக கணிக்கப்படுகிறதோ அதுதான் வெற்றிபெறும். எனவே, மூலோபாய முக்கியத்துவம் என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு, தம்முடன் உறவுகளை பேண விரும்பும் நாடுகள் தம்மீது நடவடிக்கை எடுக்கத் துணியாது என்ற, அசட்டு நம்பிக்கையுடன் ஜெனிவாவை எதிர்கொள்ள முனைந்தால், அது இலங்கைக்கு பேராபத்தாகவும்கூட அமையலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM