மொஹானுக்கு குட்டரெஸ் வைத்த ‘குட்டு’

Published By: J.G.Stephan

08 Feb, 2021 | 11:28 AM
image

-ஹரிகரன் -

 “ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரையும் அவரது அலுவலகத்தையும் ஐ.நா.பொதுச்சபையில் வைத்து விமர்சனம் செய்த தூதுவர் முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ், சொற்ப நேரத்திலேயே ஐ.நா.பொதுச்செயலர் குட்டரெஸிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளார்”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வை சவால்மிக்க ஒன்றாக எதிர்பார்க்கின்ற அரசாங்கம், அதனை எதிர்கொள்வதில் குழப்பமான நடவடிக்கைகளையே எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளை சிக்கலான நிலைக்குள் தள்ளியிருப்பவர்கள் இரண்டு பேர். இந்த இரண்டு பேருமே, துறைசார் இராஜதந்திரிகள் அல்ல. ஆனால் ஆட்சியாளர்கள் மீது விசுவாசம் கொண்டவர்கள். ஒருவர், வெளியுறவு அமைச்சின் செயலாளர் பேராசிரியர்.அட்மிரல் ஜயநாத் கொலம்பகே.

இன்னொருவர், ஐ.நா.வுக்கான (நியூயோர்க்) தூதுவர் முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ். இவர்களின் இருவரினதும் அண்மைக்கால நடவடிக்கைகள் ஜெனிவா விவகாரத்தைக் கையாளுவதில் சர்வதேச அளவில் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை அல்லது தலைகுனிவை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சீன சார்புடையதென்பதும், மேற்குலக விரோதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒன்று என்பதும் தெரியாத விடயங்களல்ல. ஆனால், நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடிப்பதாக, அணிசேரா கொள்கையில் செயற்படுவதாக உலகத்தை நம்ப வைக்க முனைகிறது.

தமது அரசாங்கம் பதவிக்கு வரும் போதெல்லாம், மேற்குலகம், மனித உரிமைகள் விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, நெருக்கடிகளைக் கொடுத்து வருவதாக, பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கூறியிருந்தார்.

மேற்குலகம் இவ்வாறு நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு காரணமாக இருப்பது சீன சார்பு நிலைப்பாடுகள் தான் என்பது அவருக்குத் தெரியும். அமெரிக்க விரோத நிலைப்பாட்டை, அல்லது அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துவதில், அரசாங்கம் நிதானமான போக்கை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மான விடயத்தில் அமெரிக்காவின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. 2012ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவே ஜெனிவா தீர்மானத்தை முன்வைப்பதில் காத்திரமான பங்கை ஆற்றி வந்திருக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்ட போதிலும், இலங்கை தொடர்பான தீர்மானங்களைக் கொண்டு வருவதில் பின்னால் நின்று செயற்பட்டிருந்தது. இந்த முறையும் கூட அவ்வாறான நிலைப்பாட்டிலேயே அமெரிக்கா இருப்பதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன.

இவ்வாறான நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையையும், அமெரிக்காவையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் அறிக்கை,  மற்றும் அதன் உள்ளடக்கம், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் டுவிட்டரில் வெளியிடப்பட்ட, மனித உரிமைகள் அதிகாரி ஜோட்ஸ்னா போட்யல் (Jyotsna poudyal) இன் விளக்கத்துடன் கூடிய பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தும், 1 நிமிடம் 38 செக்கன் வரையான வீடியோ என்பனவற்றையும், அமெரிக்காவின் தலையீட்டையும் காட்டமாக விமர்சிக்கும் போக்கு தீவிரமடைந்திருக்கிறது.

அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ் மெய்நிகர் முறையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்களை பைடன் நிர்வாகம் தொடரும் என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வெளிவிவகாரச் செயலர் அட்மிரல் கொலம்பகே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில், பைடன் தனது வீட்டில் உள்ள பிரச்சினைகளை முதலில் பார்த்துக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தினால் சீர்குலைக்கப்பட்ட ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது இராஜதந்திர வட்டாரங்களில் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்ட ஒரு விடயம். ஏனென்றால், அமெரிக்க ஜனாதிபதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமர்சித்திருந்தால் அது வேறு. ஒரு வெளியுறவுச் செயலாளர் அமெரிக்க ஜனாதிபதியை விமர்சிக்கும் பாங்கு காட்டமானதாக இருந்தால், அது சகித்துக் கொள்ள முடியாத இராஜதந்திர அணுகுமுறையாகவே பார்க்கப்படும்.

அவ்வாறானதொரு நிலையைத் தான் அட்மிரல் கொலம்பகே ஏற்படுத்தியிருந்தார். ஏற்கனவே இதேபாணியில் 2007ஆம் ஆண்டு கொழும்பு வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்களான லூயிஸ் ஆபரின் உருவத்தை வைத்து,  உதைபந்து என்று மனித உரிமைகள் அமைச்சின் செயலர் செய்த விமர்சனமும்,  நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின்,  சில்வா செய்த விமர்சனமும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

அதேபாணியில் தான், பைடன் நிர்வாகத்தை விமர்சனம் செய்திருக்கிறார். அட்மிரல் கொலம்பகே. அதுபோதாதென்று, அவர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை விமர்சித்த பாங்கும் அந்த விவகாரத்தில் கொழும்புக்கும் ஜெனிவாவுக்கும் இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவும் மாறியிருக்கிறது.

ஜெனிவா விவகாரத்தைக் கையாளுவதில் அட்மிரல் கொலம்பகேக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்திருப்பது, விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அட்மிரல் கொலம்பகே, சர்வதேச உறவுகள் தொடர்பான, பேராசிரியராக இருந்தாலும், நடைமுறையில் அவர் ஒரு அனுபவமிக்க இராஜதந்திரி அல்ல. இராஜதந்திர முன்அனுபவங்களைக் கொண்டவருமல்ல.

ஒரு முன்னாள் கடற்படைத் தளபதியிடம் இருக்கக் கூடிய குணம்சங்களைத் தான், வெளியுறவு அமைச்சின் செயலராகவும் அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது இலங்கைக்கு ஜெனிவாவில் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது என்பது, அரசதரப்பில் உள்ள பலரது அச்சமாக காணப்படுகிறது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவினால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டு, மைத்திரிபால சிறிசேனவினால் பதவியில் இருந்து தூக்கப்பட்ட மொஹான் பீரிஸ் அண்மையில் தான், ஐ.நா.வுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். நியூயோர்க்கில் பணியாற்றத் தொடங்கியுள்ள அவர் கடந்த 28ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபையில்  உரையாற்றியிருந்தார்.

அவரது உரை மூன்று நாட்களுக்குப் பின்னர் தான்  ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இந்த உரையில் அவர், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை, தீவிரவாதிகள் தமது கருவியாக பயன்படுத்திக் கொள்வதாக குற்றசாட்டியிருந்தார். அரசுகள் அல்லாத தரப்புகளும், பயங்கரவாதிகளும் ஐ.நா. அமைப்புகளை தளமாக பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், நாடுகளின் மீதான, ஐ.நா. அமைப்புகளின் தலையீடுகளையும் அவர் எதிர்க்கும் வகையில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனைக் கூறப் போய், ஐ.நா. பொதுச்சபையில், வலியச் சென்று அவர் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்று கூறுவது தான் பொருத்தமானது.

அன்றைய கூட்டத்தில், இலங்கைத் தூதுவர் மொஹான் பீரி ஸுக்கு ஐ.நா. பொதுச்செயலர் “குட்டு வைத்த” விவகாரம் இங்குள்ள ஊடகங்களின் கண்களில் தென்படாமல் போனது ஆச்சரியம் தான். ஒவ்வொரு நாடுகளினதும் பிரதிநிதிகள் உரையாற்றி முடித்ததும், அதற்கு ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரெஸ் தமது பதிலைக் கொடுத்திருந்தார்.

மொஹான் பீரி ஸின் உரைக்கு ஐ.நா. பொதுச் செயலர் கொடுத்த பதில், முகத்தில் அடித்தது போல அமைந்திருந்தது.

“இன்றைய உலகில், மனித உரிமைகள் மற்றும் மோதல்களுக்கு பிந்தைய சூழ்நிலைகளில், முக்கியமாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான சட்ட பரிமாணங்களிலில், சர்வதேச நிறுவனங்களின் அக்கறை மற்றும் ஆர்வம் அதிகரித்து வருவதை அங்கீகரிப்பது முக்கியம்.

தற்போது இடம்பெறும் அனைத்து தலையீடுகளும் பயனுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு உதவும் என்று நம்புகிறேன். 

ஒரு நாடு அதன் காயங்களை குணப்படுத்த வேண்டும். அதற்கு உண்மை அவசியம்,  உண்மை மற்றும் நல்லிணக்கம் இல்லாமல் முன்னேற முடியாது. அதில் பொறுப்புக்கூறல் என்பது ஒரு முக்கியமானதொரு கருவி. 

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இந்த இரண்டு தேவைகளையும் இலங்கை மக்களும் இலங்கை அரசாங்கமும் தீவிரமாக எடுத்துக் கொள்வதானது,  பிற நிறுவனங்களின் ஆர்வத்தை குறைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என ஐ.நா. பொதுச்செயலர் கொடுத்த பதிலை வெளிவிவகார அமைச்சு  அப்படியே விழுங்கி விட்டது.

இவ்வாறான ஒரு மூக்குடைபாடு இலங்கைக்கு ஏற்பட்டிருக்கத் தேவையில்லை. பொதுச்சபையில் போய், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தை விமர்சித்ததால் தான் இந்த நிலை. மொ ஹான் பீரிஸ், சட்டமா அதிபராக - பிரதம நீதியரசராக இருந்தவரே தவிர, துறைசார் இராஜதந்திரி அல்ல. அதனை அவர் ஐ.நா.வில் போய் நிருபித்திருக்கிறார்.

இவ்வாறான நிலையில் உள்ளவர்கள் தான் இப்போது இலங்கையின் வெளிவிவகார கொள்கையைக் கையாளுகின்ற நிலையில் உள்ளனர். இதனால், சர்வதேச அளவில் தலைகுனிவுகளும், குட்டுப்படுதல்களும் தவிர்க்க முடியாததாகவே இருக்கப் போகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27