அப்பிள் ஐபோன் 5 கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப உலகையே தன்பக்கம் திரும்பச் செய்திருந்த சாதனம் என்றால் அது மிகையல்ல.
பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய ஐபோன் 5 அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததாக? அல்லது 'அப்பிள் பேன் போய்ஸ்/ கேர்ள்ஸ்' ( Apple Fan boys/ Girls) எனப்படும் அதன் தீவிர விசிறிகளை மட்டுமே திருப்பதிப்படுத்தியதா என்பது விவாதத்துக்குரியது.
அப்பிள் ஐபோன் 5 நன்றாக உள்ளது. ஆனால் ஆஹா! என சொல்லவைக்கும் எவ்வித அம்சங்களும் அதில் இல்லையென அதாவது ஆங்கிலத்தில் சொல்வதாயின் 'No wow factors' என மொபைல் உலகினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இத்தகைய எதிர்மறையான விமர்சனங்களையும் மீறி இணையமூடான அப்பிள் ஐபோன் 5 இன் முன்கூட்டிய அதாவது 'பிரி ஓடர்' (Pre order) சாதனங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அப்பிள் அறிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இவ் அறிவிப்பினை அப்பிள் மேற்கொண்டுள்ளது.
அப்பிள் மட்டுமன்றி தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர்கள் சிலரும் தங்களது இணையம் மூலமான 'பிரி ஓடர்' (Pre order) சாதனங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் அப்பிளின் இவ் அறிவிப்பானது எவ்வளவு தூரத்துக்கு உண்மை என ஸ்மார்ட் போன் சந்தை ஆராய்ச்சியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்பிளின் தற்போதைய பிரதான நிறைவேற்று அதிகாரியான டிம் குக் சந்தைப்படுத்தலில் நன்கு அனுபவம் கொண்டவரெனவும் அவரின் சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களில் ஒன்றே இவ் அறிவிப்பு எனவும் சந்தை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் அறிவிப்பின் மூலம் நுகர்வோருக்கு சில தகவல்களை மறைமுகமாக அப்பிள் வழங்க முயற்சி செய்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது ஐபோன் 5 இன் 'பிரி ஓடர்' (Pre order) சாதனங்கள் தீர்ந்து விட்டதாக அறிவிப்பதன் மூலம் அது தொடர்பான ஒரு மாயையை உருவாக்கி மக்களிடையே ஐபோன் 5 மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதே அப்பிளின் நோக்கமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான அறிவிப்பின் ஊடாக ஐபோன் 5 இனை நேரடியாக அதன் ஸ்டோர்கள் மூலமாக கொள்வனவு செய்யும் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென அப்பிள் நம்புவதோடு அவ்வாறு ஏற்படாவிடின் ஐபோன் 5 சந்தையில் தோல்வியடைந்த சாதனமாக முத்திரை குத்தப்படுமென அந்நிறுவனம் அஞ்சுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இத்தந்திரோபாய மூலம் விற்பனையை மேலும் அதிகரிக்கமுடியுமென அப்பிள் நம்புவதாகச் சுட்டிக்காட்டும் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய உத்திகளைப் பல நிறுவனங்கள் கையாள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இக்கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சந்தை ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர்.
அப்பிளின் சாதனங்களுக்கு என்றுமே நல்ல கேள்வி உள்ளது. அதேபோலவே இதற்கும் நல்ல கேள்வியுள்ளதாக அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
எது எவ்வாறாயினும் தமது உற்பத்திகள் விற்பனையில் சாதனை படைத்ததா? இல்லையா? என்ற உண்மை அதனைத் தயாரித்த நிறுவனங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.