|
|
|
By
2012-08-02 23:55:05 |
|
அடிச்சு 'தூள்' கிளப்பப் போகிறார்கள் என்று தியேட்டருக்குள் நுழைந்தால், நிஜமாகவே 'தூள்' படத்திலிருந்து கொஞ்சத்தை அடித்திருக்கிறார்கள்?! கிராமத்திலிருக்கும் இவரது சொந்த வீட்டை இடித்துத் தள்ளிவிட்டு அங்குதான் ரயில்வே டிராக் போட திட்டமிடுகிறது அரசு. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற பொதுநல நோக்கத்தோடு (?) முதல்வரை சந்திக்க வருகிறார் ஹீரோ கார்த்தி. வந்த இடத்தில் இவர் பண்ணும் சகுனி வேலைகள்தான் முழு படமும்
கோட், சூட் சகிதமாக வந்திறங்கும் கார்த்தியை 'வெயிட் பார்ட்டி' என்று கருதி அவருக்கு செலவு செய்யும் சந்தானம், கடைசியில் ஏமாந்து தொலைப்பது ஜாலி துவக்கம். ரஜினி கமல் ரசிகர்களையும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள துடிக்கும் இவர்களது யுக்தி, காலத்திற்கேற்ற சமயோஜித புத்தி! அப்புறம் திடீரென்று தான் வந்த வேலை கார்த்தியின் நினைவுக்கு வர, அவர் வைக்கும் ஸ்டெப்புகள் அத்தனையிலும் கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் வறட்சி.
ஆப்பக்கடை ராதிகாவை அந்த ஊருக்கே மேயராக்குகிறார். எலக்ஷன் நேரத்தில் தன் வீட்டில் கை நனைத்து பின்பு நன்றி மறந்த முதல்வர் பிரகாஷ்ராஜை ஆட்சி கட்டிலில் இருந்து தள்ளிவிடுகிறார். ஜெயிலில் ஜால்ரா வாத்தியத்தில் மெய் மறந்து கிடக்கும் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசராவை முதல்வராக்குகிறார். இறுதியில் டில்லிக்கே ராஜாவாக துடிக்கிறார். இப்படியாக கார்த்தியின் டிரேட்மார்க் எண்ட் சிரிப்போடு படத்திற்கு எண்ட் போடப்படுகிறது.
முதல் படத்திலிருந்து, சகுனிக்கு முந்தைய படம் வரைக்கும் கார்த்தியின் கதை கேட்கும் இலாகாவிலிருந்த முக்கிய நபர் தலைமறைவாகியிருக்கிறார் போலும்... ஆனால் அவரை தேடிப்பிடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு கார்த்தி.
அரசியல் படம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஊசியை வளைத்து வளைத்து குத்துவதற்குதான் இங்கு ஆயிரமாயிரம் சம்பவங்கள் இருக்கிறதே, அப்புறம் என்ன தயக்கம்? மற்றபடி கார்த்தியின் சிரிப்பும், அந்த நக்கலும் என்றும் மாறா இளமையோடு துள்ளித்திரிகிறது படம் முழுக்க
சந்தானத்தின் ட்ரிப்பிள் மீனிங் பஞ்ச்சுகளை புரிந்து கொண்டு, 'அடக்கடவுளே' என்று அதிர்வதற்குள் அடுத்ததை போட்டுத் தாக்குகிறார் மனிதர்.
மசாலா படத்தில் கதாநாயகிக்கு என்ன பெரிசாக வேலை இருந்துவிடப் போகிறது? ப்ரணிதாவின் கோழிமுட்டை கண்களும், கொழுக் மொழுக் சமாச்சாரங்களும் நாலைந்து டூயட்டுகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. நடிப்பை பொழிஞ்சாதான் பார்ப்போம்னு யாரும் துடிக்காத போது அவரும்தான் என்ன செய்வார் பாவம்?
மேயராகிவிட்ட ராதிகா, ஒவ்வொரு படியேறும்போதும் தனது வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் எண்ணிப் பார்க்கிற காட்சியில் டைரக்டரின் சரக்கு பளிச்சிடுகிறது. ஆனால் அவ்ளோ பெரிய ஸ்டோரிக்கு இவ்ளோ சரக்கு போதுமா பிரதர்?
அட... கொஞ்சம் அழகாக, மெருகு குலையாமல் கிரண்! ஹ்ம்ம்... ஜெமினியில் அறிமுகமாகி தமிழ்சினிமாவில் பிழிந்தெடுக்கப்பட்ட அதே கிரண்தான். பிரகாஷ்ராஜின் தயவால் மேயராக நினைத்தவர் குண்டுக்கு தப்பி எதிரி முகாமில் சரணடைந்து படத்தின் 'கொண்டை வளைவு' திருப்பத்திற்கும் உதவியிருக்கிறார்.
நாசர் 'பேஷா' நடித்து அந்த ஜீன்ஸ் சாமியாரை தோற்றப்படுத்துகிறார். பீடியில் ஆரம்பித்து கோடியில் புரளும் அவரது ஆன்மீக பிசினெஸ் கடைந்தெடுத்த உண்மை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் சில மெலடிகளுக்கு உயிர் இருக்கிறது. பூ படத்தின் மூலம் அறிமுகமாகி 'கெத்தய்யா'வாக வலம் வந்த ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இப்படத்தை பொறுத்தவரை வெறும் வெ...!
சூரிய நமஸ்காரத்தை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு மினுக்கட்டாம் பூச்சியின் வெளிச்சமே மிச்சம்!
|
|
||||
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------